சீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோவை குனியமுத்தூர் போலீஸார் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிப்ரவரி மாதம் பேசியதற்கு அவர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பார்ப்பனியத்துக்கு ஆதரவாக என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. ஆகியவற்றை திணித்த இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் சிறுபான்மையினர், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் 2 மாதத்துக்கும் மேலாகப் போராட்டம் நடந்தது. அதே பாணியில் தமிழகத்திலும் சென்னை வண்ணாரப்பேட்டை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் மாதக்கணக்கில் கூடி இருப்புப் போராட்டம் நடத்தினர். கொரோனா தொற்றுப் பரவல் ஆரம்பித்ததால் இப்போராட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இப்போராட்டங்கள் நடக்கும்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் அக்கூட்டங்களில் கலந்துகொண்டு, போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் பேசி வந்தனர்.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாகப் பல கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு சீமான் பேசினார் .

இதையடுத்து சீமானின் பேச்சு ஆட்சேபகரமாக இருப்பதாகக் கூறி அவர் மீது கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி சீமான் பேசியதற்காக 75 நாட்கள் கடந்த நிலையில் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீமான் மீது 124 (ஏ) தேசத்துரோக வழக்கு, 153(ஏ) இரு பிரிவினருக்கிடையே விரோத உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய இரு பிரிவுகளில் குனியமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.