ஓ மை டாக் – விமர்சனம்

நடிப்பு: அர்னவ் விஜய், அருண் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார், வினய் ராய் மற்றும் பலர்

இயக்கம்: சரோவ் சண்முகம்

தயாரிப்பு: ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ சார்பாக ஜோதிகா & சூர்யா

இணை தயாரிப்பு: ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன்

ஒளிப்பதிவு: கோபிநாத்

இசை: நிவாஸ் கே.பிரசன்னா

ஓடிடி தளம்: அமேசான் பிரைம்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

உடல் ஊனமுற்ற எந்த ஒரு உயிரியையும், அது ஊனமுற்றது என்பதற்காக வெறுப்பது எத்தனை கேவலமானது என்பதை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அழுத்தமாகச் சொல்லும் படம் ‘ஓ மை டாக்’. இக்கருத்தை ஒரு அழகிய அறிவான நாயோடு, சிறுவன் அர்னவ் விஜய், அவரது தந்தைருண் விஜய், தாத்தா விஜயகுமார் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா மகன் பேரன் என்ற மூன்று தலைமுறை நடிகர்களை அதே உறவுமுறை கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

குளுகுளு ஊட்டியில் மிகப் பெரிய செல்வந்தராய் திகழ்பவர் பெர்னாண்டோ (வினய் ராய்). விலையுயர்ந்த உயரின நாய்களை வளர்த்து, அவற்றுக்கு பயிற்சி அளித்து, நாய்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதில் பெருவிருப்பம் கொண்டவர். இந்திய அளவில் நடத்தப்படும் நாய்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றவர்.  ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றால் உலக அளவில் முதலிடம் பிடித்து விடலாம் என்ற கனவிலும், தீவிர முயற்சியிலும் இருப்பவர்.

தன் உடன்பிறந்த தம்பி உடல் ஊனமுற்றவர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை வெறுத்து வதைப்பவர் பெர்னாண்டோ. அப்படிப்பட்டவர் வளர்க்கும் உயரின பெண்நாய் பெற்றெடுக்கும் குட்டிகளில் ஒன்று, கண்பார்வை இல்லாமல் பிறக்கிறது. அதைப் பார்த்து அருவருப்படையும் பெர்னாண்டோ, அந்த நாய்க்குட்டியைக் கொண்டுபோய் கொன்று புதைத்துவிடும்படி தன் உதவியாளர்களுக்கு உத்தரவிடுகிறார். அதன்படி அவர்கள் கொண்டு செல்லும்போது, கொல்லப்படுவதற்கு முன்பே அவர்களிடமிருந்து தப்பியோடி மறைந்துவிடுகிறது நாய்க்குட்டி.

அதே ஊட்டியில் சங்கர் (அருண் விஜய்), தன் மனைவி திவ்யா (மகிமா நம்பியார்), மகன் அர்ஜுன் (அர்னவ் விஜய்), அப்பா சண்முகம் (விஜயகுமார்) ஆகியோருடன் நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மகன் அர்னவ் விஜய்யை ‘இண்டர்நேஷனல் ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்கும் சங்கர், அவனது படிப்பு செலவுக்காக தனது வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கி, அதற்கு வட்டி செலுத்தி வருகிறார்.

பெர்னாண்டோவின் உதவியாளர்களிடமிருந்து தப்பிய கண்பார்வை இல்லாத நாய்க்குட்டி, சகதியில் கிடந்து தவித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும் சிறுவன் அர்ஜுன், அதன்மீது கருணையும் பரிவும் கொள்கிறான். அதற்கு ‘சிம்பா’ என பெயர் சூட்டி தன் வீட்டில் வைத்து வளர்த்துவருகிறான்.

சிம்பாவுக்கு கண்பார்வை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறான் அர்ஜுன். அதற்கான அறுவை சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபாய் தேவை என தெரியவர, அவன் தன் நண்பர்களோடு சேர்ந்து அந்த தொகையைத் திரட்டும் முயற்சியில் இறங்குகிறான். ஒருவழியாய் அறுவை சிகிச்சை நடந்து முடிகிறது. சிம்பாவுக்கு கண்பார்வை கிடைத்துவிடுகிறது.

பார்வை பெற்ற சிம்பா, இந்திய அளவிலான நாய்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கிறது. முதல் ரவுண்டிலேயே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறது. இதனால் கடுப்பாகும் வில்லன் பெர்னாண்டோ, போட்டியில் தன் நாய் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக சதி செய்து, சிம்பாவின் கண்பார்வையை பறித்துவிடுகிறான்.

கண் பார்வையை இழந்த சிம்பா இறுதிப் போட்டியில் பங்கேற்கக் கூடாது, என்று நடுவர்கள் சொல்லி விடுகிறார்கள். இறுதியில் சிம்பா போட்டியில் பங்கேற்றதா, இல்லையா? யாருடைய நாய் வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது? என்பது மீதிக்கதை.

கதையின் நாயகன் அர்ஜுனாக வரும் அர்னவ் விஜய் தனது முதல் படத்திலேயே அசத்தலாக நடித்து, பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்துவிட்டார். தனக்கும், தன் செல்ல நாயான சிம்பாவுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை துல்லியமாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். அப்பா அருண் விஜய், தாத்தா விஜய்குமார் போல எதிர்காலத்தில் தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடம் பிடிப்பார் என்பதில் ஐயம் இல்லை.

அர்னவ் விஜய்யின் தந்தை சங்கராக வரும் அருண் விஜய், அம்மா திவ்யாவாக வரும் மகிமா நம்பியார், தாத்தா சண்முகமாக வரும் விஜயகுமார், வில்லன் பெர்னாண்டோவாக வரும் வினய் ராய் உள்ளிட்ட அனைவரும் தத்தமது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.

குழந்தைகள் மனதில் விளையாட்டுப்போல பல நல்ல கருத்துகளை விதைக்கும் ஒரு அருமையான படத்தை எடுத்ததற்காக இயக்குனர் சரோவ் சண்முகத்தை பாராட்டலாம். வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் வலிமையாகவும், அவரது உதவியாளர்களாக வந்து நாய்க்குட்டியை கொல்ல பொறுப்பேற்கும் இரட்டையர்களை இன்னும் கொஞ்சம் காமெடியாகவும் படைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையும் கோபிநாத்தின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.

‘ஓ மை டாக்’: தாத்தா – பாட்டி, அப்பா – அம்மா, குழந்தைகள் என வீட்டிலுள்ள மூன்று தலைமுறையினரும் சேர்ந்தமர்ந்து கண்டு களிக்கலாம்!

 

Read previous post:
0a1d
மீண்டும் புதிதாக மலர்கிறது பள்ளிக் கால நினைவுகளை கிளறும் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ்! 

புதிய நட்சத்திரங்களுடன், புத்தம் புது பொலிவுடன் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் “கனா காணும் காலங்கள்” வெப் சீரிஸ் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது

Close