வித்தைக்காரன் – விமர்சனம்

நடிப்பு: சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ், மதுசூதன், சுப்பிரமணிய சிவா, ஜான் விஜய், பாவெல் நவகீதன், ஜப்பான் குமார் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: வெங்கி

ஒளிப்பதிவு: யுவா கார்த்திக்

படத்தொகுப்பு: அருள் இளங்கோ சித்தார்த்

இசை: விபிஆர்

தயாரிப்பு: ‘ஒயிட் கார்பெட் பிலிம்ஸ்’ கே.விஜய் பாண்டி

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

இன்று தமிழ்த் திரையுலகில் மிகவும் ’டிமாண்ட்’ ஆன, ரொம்பவே மவுசு ஏறிய இயக்குநராக கருதப்படும் லோகேஷ் கனகராஜிடம் உதவியாளராகப் பணியாற்றி சினிமாத்தொழில் பயின்ற வெங்கி, இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம்; காமெடி நடிகரான சதீஷ் ‘நாய் சேகர்’, ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்கும் மூன்றாவது படம்; கோலிவுட்டில் இப்போது டிரெண்டாக இருக்கும் ‘டார்க் காமெடி’ ஜானர் வகைப் படம் ஆகிய காரணங்களால் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘வித்தைக்காரன்’ திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

0a1dநாயகன் வெற்றி (சதீஷ்) மேஜிக் நிபுணர். பிறரை ஏமாற்றுவது தவறு அல்ல; பிறரிடம் ஏமாறுவது தான் தவறு என்ற கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து வருபவர். எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட பொருளாக இருந்தாலும் சரி, அதை தனது புத்தியாலும், வித்தையாலும் கைப்பற்றும் திறன் படைத்தவர் அவர்.

இன்று தங்கக் கடத்தலில் ஈடுபடும் கும்பலின் தலைவன் கோல்டு மாரி (சுப்ரமணிய சிவா), கள்ளப் பணத்தை மாற்றித் தரும் கும்பலின் தலைவன் அழகு (ஆனந்த்ராஜ்), வைரக் கடத்தலில் ஈடுபடும் கும்பலின் தலைவன் கல்கண்டு ரவி (மதுசூதனன் ராவ்) ஆகிய மூவரும் சிறுவயதில் ஒன்றாக ஒரு சேட்டிடம் வேலை பார்த்தவர்கள். தொழிலைக் கற்றுக்கொண்ட பின் அந்த சேட்டையே போட்டுத் தள்ளிவிட்டு, சொந்தமாக கூட்டாய் தொழிலில் இறங்கியவர்கள். வளர்ந்த பின் தனித் தனியே பிரிந்து, இப்போது பரஸ்பரம் போட்டியாளர்களாக களத்தில் நிற்பவர்கள்.

இந்த மூவருடனும் – ஒருவருக்குத் தெரியாமல் மற்றவருடன் என – பேரம் பேசி பாட்னராக இணைகிறார் மேஜிக் நிபுணர் வெற்றி. மூவரது கிரிமினல் தொழில்களுக்கும் தனித்தனியாக உதவும் அவர், அவர்களுக்குத் தெரியாமல் சில வேலைகளையும் செய்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் விமான நிலையத்தில் சிக்கியிருக்கும் வைரங்களைக் கடத்த மூன்று கும்பல்களும் செல்கின்றன.

வைரங்கள் யாருக்குக் கிடைத்தன? வெற்றி இவர்களுடன் இணைந்ததன் நோக்கம் என்ன? அது நிறைவேறியதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘வித்தைக்காரன்’ திரைப்படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகன் – மேஜிக் நிபுணர் வெற்றியாக நடித்திருக்கிறார் சதீஷ். தனது வழக்கமான காமெடி பாணியை முற்றிலும் உதறிவிடாமல், ஹீரோ என்பதற்காக ஹீரோயிசம், டூயட், ஆக்‌ஷன் போன்றவற்றை வலிந்து திணிக்காமல் – பாய் நெக்ஸ்ட் டோர் போல – இயல்பாக நடித்திருக்கிறார். கதையை முன்னிலைப்படுத்தி, கதாபாத்திரத்துக்குத் தேவையான அளவு நடிப்பை நிறைவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

’பூதக்கண்ணாடி’ என்ற புலனாய்வு பத்திரிகையின் இன்வெஸ்ட்டிகேட்டிவ் ஜர்னலிஸ்டாக நடித்திருக்கிறார் சிம்ரன் குப்தா. அவரது அறிமுகக் காட்சி சிறப்பாக அமைந்து, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், அதன்பின் வரும் அவரது காட்சிகள் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை.

கள்ளப் பணத்தை மாற்றித் தரும் கும்பலின் தலைவன் அழகுவாக வரும் ஆனந்தராஜ், தங்கக் கடத்தல் கும்பலின் தலைவன் கோல்டு மாரியாக வரும் சுப்பிரமணி சிவா, வைரக் கடத்தல் கும்பலின் தலைவன் கல்கண்டு ரவியாக வரும் மதுசூதன ராவ், இவர்களின் அல்லக்கைகளாக வரும் பாவெல் நவகீதன், ஜப்பான் குமார், சாம்ஸ் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் ஆகியோர் அனைவரும் போட்டி போட்டு சிரிக்க வைக்கிறார்கள். குறிப்பாக ஆனந்தராஜ் செய்யும் காமெடிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

டார்க் காமெடி ஜானர் படம் என்பதால், குற்றச்செயல்களையும் காமெடியாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் வெங்கி, முதல் பாதி படத்தை கொள்ளை சம்பவங்கள் மூலம் சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்று, இரண்டாம் பாதி படத்தை காமெடி கலாட்டாவாக கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார். வைரக் கொள்ளைச் சம்பவத்துக்காக அனைத்து கதாபாத்திரங்களையும் விமான நிலையத்தில் ஒன்று சேர்த்து, அவர்கள் மூலம் காமெடி திருவிழாவை நடத்தியுள்ள இயக்குநர் வெங்கி, மக்களை மகிழ்விப்பதில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒளிப்பதிவாளர் யுவ கார்த்திக், இசையமைப்பாளர் விபிஆர், படத்தொகுப்பாளர் அருள் இளங்கோ சித்தார்த் ஆகியோரின் பணிகள் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.

‘வித்தைக்காரன்’ – பார்க்கலாம்! விழுந்து விழுந்து சிரிக்கலாம்!