பாம்பாட்டம் – விமர்சனம்

நடிப்பு: ஜீவன், மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: வடிவுடையான்

ஒளிப்பதிவு: இனியன் ஜே ஹாரிஸ்

படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ்

இசை: அம்ரிஷ்

தயாரிப்பு: வி.பழனிவேல்

பத்திரிகை தொடர்பு: மணவை புவன்

ஃபேண்டஸி திரில்லர் ஜானரில், பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் ராஜா ராணி படம் இது. ராஜ வம்சத்தை அழிக்க முயலுகிறது ஒரு ராட்சதப் பாம்பு; அதை தடுக்கப் போராடுகிறது ராஜவம்சம் என்பது இதன் மையக் கதைக்கரு.

0a1d

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், சுதந்திரத்துக்கு முன்பு, இந்திய சமஸ்தானம் ஒன்றை ஆண்டு வருகிறார் மகாராணி மல்லிகா ஷெராவத். அவர் பாம்பு கடித்து மரணம் எய்துவார் என்று கணித்துச் சொல்லுகிறார் ஜோதிடர் ஒருவர். இதைக் கேட்டு ஆவேசம் அடையும் ராணி, அந்த ஜோதிடரை சிறைக்குள் தள்ளி அடைத்துவிட்டு, அந்த சமஸ்தானத்தில் உள்ள ஒட்டுமொத்த பாம்புகளையும் கொன்றொழிக்க ஆணையிடுகிறார். பாம்புகள் கூட்டம் கூட்டமாய் பிடிக்கப்பட்டு, கொத்துக் கொத்தாய் கொல்லப்படுகின்றன. இருந்தும் இதில் தப்பித்த ராட்சதப் பாம்பு ஒன்று மகாராணியைக் கொன்று விடுகிறது.

அந்த ராட்சதப் பாம்பால் மகாராணியின் மகளான இளவரசியின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால் ராஜ குடும்பம் சமஸ்தானத்தை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் குடியேறுகிறது.

மகாராணி வசித்த அரண்மனையில் மகாராணியின் ஆவி அலைந்து கொண்டிருப்பதாகவும், மகாராணியைக் கொன்ற ராட்சதப் பாம்பு அங்கேயே வசித்து வருவதாகவும் ஊர்மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் காவல் துறை அதிகாரி ஜீவன், அந்த அரண்மனைக்கு வருகிறார். ராட்சதப் பாம்பை கொல்ல முயற்சி செய்கிறார்.

ஜீவன் ராட்சதப் பாம்பைக் கொன்றாரா? அவர் அந்த அரண்மனைக்கு வர வேறு என்ன காரணம்? மகாராணி மல்லிகா ஷெராவத்தின் ஆவி உண்மையில் இருக்கிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு திரில்லான பல திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘பாம்பாட்டம்’  திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக ஜீவன் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றும் அவர், அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் வருகிறார். மகன் வேடத்துக்கு இளமையையும், அப்பா வேடத்துக்கு சற்று முதுமையையும் காட்டி, தனது கதாபாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

அதிகார மமதை கொண்ட மகாராணியாக வரும் மல்லிகா ஷெராவத், கம்பீரமான தோற்றத்தில் மிடுக்காக நடித்து மிரட்டியிருக்கிறார்.

இளவரசியாக வரும் ரித்திகா சென் அழகாக இருக்கிறார். பயமும் பதட்டமும் கலந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

இப்படத்தில் நடக்கும் அத்தனைக் குற்றங்களுக்கும் காரணமான காவல் துறை அதிகாரி வேடத்தில் வரும் இயக்குனர் வடிவுடையான், ஒரு பக்க மூக்கை உறிஞ்சிக்கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது மகனாக வரும் மெயின் வில்லனும் தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்துள்ளார்.

யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ராஜ வம்சத்தை சுற்றி நடக்கும் மர்மத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வடிவுடையான். அரண்மனை, ராட்சதப் பாம்பு என படத்தை பிரம்மாண்டமாக கொடுக்க முயன்று, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.  கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படத்தை இன்னும் அதிகமாக ரசித்திருக்கலாம்.

இனியன் ஜெ ஹாரிஸின் ஒளிப்பதிவு ஓ.கே ரகம்.

அம்ரீஷின் பின்னணி இசை படத்துக்கு பக்கபலம்.

’பாம்பாட்டம்’ – ஒரு முறை பார்க்கலாம்!