ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் இணையமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ டிரெய்லர்!

2022ஆம் ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து,  ரசிகர்களிடம்  பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”.  விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திரக் கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தென்னிந்திய திரைத்துறையின் முதன்மை நாயகிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் சமந்தா முதல்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க,  ‘நானும் ரௌடி தான்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில்  இயக்கியுள்ள படம் இந்த “காத்து வாக்குல ரெண்டு காதல்”

முன்பு வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான  “டூ டூடூ டூ டூடூ” பாடல், ரெண்டு காதல், நான் பிழை போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து, சாதனை படைத்தன. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான “டிப்பம் டப்பம்” சிங்கிள் பாடல் அனைவரது மனதை கவர்ந்த பாடலாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வெளியான டிரெய்லர், ரசிகர்களின் ஆரவார வரவேற்பைப் பெற்றதுடன், இணையத்தில் வைரலாகி, இணையமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ் சினிமாவில் காதல்காமெடி படங்கள் இல்லையெனும் ஏக்கத்தை போக்கும்படி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, அழகான காதல் கவிதையாக, மனம் விட்டு சிரித்து மகிழும் இனிமையான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளதை டிரெய்லர் நிரூபித்துள்ளது.

இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, S.R.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, ஸ்டண்ட் பணிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, தயாரிப்பாளர் S.S.லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் திரு உதயநிதி ஸ்டாலின் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

https://youtu.be/oqEsncqQQqA