அமைச்சர்கள் நேரில் வாக்குறுதி: நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயத்தை அழிக்கும் இந்த் திட்டத்தை எதிர்த்து பெண்கள், குழந்தைகள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் என பெருந்திரளான வெகுமக்கள் கடந்த 22 நாட்களாக நெடுவாசலில் இரவு பகலாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் தனித்தனியே போராட்ட களத்துக்கு வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, மக்களின் விருப்பமின்றி ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய, மாநில அரசுகள் சார்பில் அவர்கள் உறுதி அளித்தார்கள்.

அமைச்சர்களின் இந்த வாக்குறுதியை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளார்கள். மக்களின் விருப்பத்துக்கு மாறாக எந்த வழியிலாவது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முனைந்தால், 100 மடங்கு வீரியத்துடன் போராட்டம் மீண்டும் தொடங்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.