“என் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்க காரணம் தனுஷ்”: வெற்றி மாறன் நெகிழ்ச்சி!

தனுஷ் முதன்முதலாக இரு வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘கொடி’. வருகிற தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், இதன் தயாரிப்பாளரான இயக்குனர் வெற்றி மாறன் பேசியதாவது:

இயக்குனர் துரை செந்தில்குமார் என்னிடம் முதன்முதலில் ‘கொடி’ படத்தின் கதை சொல்லும்போது அவரை தனுஷ் சாரிடம் கதை சொல்லுமாறு கூறினேன். அவர் தனுஷ் சார் தயாரிப்பில் இரண்டு வெற்றி படங்களை உருவாக்கியவர்.

இப்போது நான் தனுஷ் சார் நடிப்பில் – துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும்  இப்படத்தை தயாரித்துள்ளேன். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த படத்தில் பெயருக்கு தான் தயாரிப்பாளர் என்று கூறுவேன்.

நான் தனுஷ் சாரிடம், “உங்களை வைத்து படம் தயாரிக்க வேண்டும்” என்று கேட்டவுடன். தனுஷ் சார் உடனே “துரை செந்தில்குமார் என்னிடம் கூறியுள்ள கதையை நீங்கள் தயாரியுங்கள்” என்று கூறினார். இப்படி என்னுடைய வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்க காரணமாக இருந்த தனுஷ் சாருக்கு இந்த தருணத்தில் நான் நன்றி கூற வேண்டும்

இவ்வாறு வெற்றி மாறன் பேசினார்.