நேரடியாக ஆன்லைனில் வெளியாகும் முதல் தமிழ்படம் ‘கர்மா’: அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார்!

தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக நேரடியாக ஆன்லைனில் வெளியிடப்படும் முதல் தமிழ்படம் என்ற பெருமையை ‘கர்மா’ பெற இருக்கிறது. பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், மாற்று சினிமாவுக்கான முன்னோடியாக திகழ்பவருமான அனுராக் காஷ்யப், இத்திரைப்படத்தை இணையதளங்களில் நேரடியாக காணும் லிங்கை ட்விட்டரில் வெளியிடுகிறார்.

கிரியேட்டிவ் கிரிமினல் பட நிறுவனம் தயாரிப்பில், ஆர்.அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கர்மா’ திரைப்படத்தை செப்டம்பர் 16 முதல் ஆன்லைனில் காணலாம். iTunes, Google Play, Amazon Video உட்பட பல இணையதளங்களில் இப்படத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“இன்று இணையம் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. இனிவரும் காலங்களில் இணையத்தில் திரைப்படங்களை நேரடியாக வெளியிடுவது சர்வ சாதாரணமாகலாம். அதற்கு முன்னோடியாக நாங்கள் திகழ்வதற்கு பெருமை அடைகிறோம். எங்களின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளது படக்குழு.

‘கர்மா’ திரைப்படம் சமீபத்தில் நடந்த Madrid International Film Festivalல், சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு தகுதி பெற்றது அது மட்டுமல்லாமல், Hollywood Sky Film Festivalலும் சிறந்த திரைப்படத்திற்கான தகுதி பெற்றது. இத்திரைப்படம் Experimental வகையைச் சேர்ந்த Independent Cinema ஆகும்.

இப்படத்திற்கான டைட்டில் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதி, பாடியுள்ளார். எல்.வி.கணேசன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு – வி.பி.சிவானந்தம், படத்தொகுப்பு – வினோத் பாலன், ஊடகத் தொடர்பு – நிகில் முருகன்.