அமலாபால் – இயக்குனர் விஜய் விவாகரத்து: அடுத்த வாரம் அறிவிப்பு!
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை அமலாபால். இவர் 2010ஆம் ஆண்டு ‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் படவுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ‘சிந்துவெளி’, ‘மைனா’, ‘தெய்வத் திருமகள்’, ‘தலைவா’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘அம்மா கணக்கு’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுஷூக்கு ஜோடியாக ‘வடசென்னை’ படத்தில் நடித்து வருகிறார்.
பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் மகன் விஜய். இவர் ’மதராச பட்டினம்’, ‘கிரீடம்’, ‘தலைவா’, ‘தாண்டவம்’, ‘சைவம்’, ‘இது என்ன மாயம்’ உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ‘தேவி’ என்ற படத்தை இயக்கிவருகிறார்.
2011ஆம் ஆண்டு விஜய் இயக்கிய ‘தெய்வத் திருமகள்’ படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. 2014ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி இவர்களது நிச்சயதார்த்தம் கேரள மாநிலம் கொச்சியிலும், திருமணம் ஜூன் 12ஆம் தேதி சென்னையிலும் நடந்தது.
திருமணத்துக்குப்பின் அமலாபால் கணவருடன் சென்னையில் குடியேறினார். அடையாறு போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்கள்.
ஆரம்பத்தில் சிறிதுகாலம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த அமலாபால், பின்னர் மீண்டும் நடிப்புத் தொழிலுக்குத் திரும்பினார். இதை கணவர் விஜய்யும், அவரது குடும்பத்தினரும் விரும்பவில்லை. அவர்களது விருப்பத்தை மீறி அமலாபால் புதிய படங்களில் ஒப்பந்தமானார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி சச்சரவு ஏற்பட்டது.
2015ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த ‘பசங்க-2’ இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு, இருவரும் சேர்ந்து எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. விஜய் பிரிந்துபோய் தனது பெற்றோர்களுடனும், அமலாபால் தனியாகவும் வசித்து வருகிறார்கள்.
இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செயதுகொள்ள முடிவெடுத்திருப்பதாகவும், இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை, அடுத்த (ஆகஸ்டு) மாதம் முதல் வாரத்தில் இருவரும் கூட்டாக வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகிலும், ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்படும் இந்த விவகாரம் குறித்து விஜய், அமலாபால் இருவருமே விளக்கம் அளிக்காமல் மவுனம் சாதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.