கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி: மாடியிலிருந்து விழுந்ததால் கால் முறிந்தது!

கமல்ஹாசன் தற்போது ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்தில் நடிப்பதோடு அதை இயக்கியும் வருகிறார். மகள் ஸ்ருதிஹாசனுடன் முதன்முதலாக அவர் இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்திவிட்டு, கடந்த வாரம் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தின் மாடிப்படியிலிருந்து நேற்று இரவு 11 மணியளவில் கால் தடுமாறி தவறி கீழே விழுந்தார். இதனால் வலியில் துடித்த அவர் உடனடியாக ஆயிரம் விளக்கு கிரீம் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், கால் மூட்டுப்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து, ஆர்தோ மருத்துவர் நவல்தி ஷங்கர் முன்னிலையில் கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் சில வாரம் ஓய்வில் இருப்பார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.