கமல் செய்வதற்கு பெயர் “வைணவ அரசியல்”!

கமலரசியல்.

ஹாஹாஹா… #கமலஹாசர் ஹார்வர்ட்டில் “வணக்கம்” என்று பேச்சைத் தொடங்கினார். பக்ததொண்டாள் “தலைவா” என்று கோஷமிட்டு புளகாங்கிதம் அடைந்தனர். சூப்பர்!

கமலஹாசர் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை என்று மண்டையை சொறிபவர்களுக்கு நான் பல வருட காலமாக தனிப்பட்ட முறையில் சொல்லி வரும் பதில், கமலர் செய்வதற்கு பெயர் “வைணவ அரசியல்” என்பது. இன்று அதை பொதுவெளியில் நேரடியாகவே சொல்ல கடமைப்பட்டுள்ளேன் யுவர் ஹானர்.

சமீபத்தில் ஒரு வீடியோ பேட்டியில் திரு.வே.மதிமாறன் இதை இருப்பதும்-இல்லாததுமாக கலந்து கட்டி கமலின் வைணவ அரசியல் பற்றி சொல்லியிருந்தார். இதை நான் ஒரு ஐந்து வருடங்களாக சொல்லி வருகிறேன். கமலரிடம் மிகப் பெரிய பிரச்சனை இது தான். அவர் மாதிரியான ஹாஃப்பாயில் (அரைவேக்காடு) ஐயங்காரை பார்ப்பது மிக மிக அபூர்வம். இந்த மாதிரியான அரைவேக்காடுகள் மிக ஆபத்தானவர்கள்.

கமலர் சென்னையில் கல்லூரி ஒன்றில் இளைஞர்களை கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்து உரையாடினார். அப்போது ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?” அதற்கு கமலர்… “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால எல்லாம் போக வேண்டாம். இப்போ சமீப காலத்தை எடுத்தால், காந்தி, பெரியார், காமராஜர், எம்ஜிஆர், கலைஞர் எல்லாரையும் பிடிக்கும்” அப்படின்னு அவியல் மாதிரி ஒரு பதில் சொன்னார்.

அந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அரசியலில் பிடித்த தலைவர் என்று கமலர் தன் வாயால் சொல்ல வந்து, ஆனால் சொல்லாமல் தவிர்த்த பெயர் என்ன?

“ராமானுஜன்”.

இன்றைய அரசியல் லாபத்துக்காக அந்த பெயரை சொல்லாமல் தவிர்த்தது தான் நான் சொல்லும் ஆபத்தான அரைவேக்காட்டுத்தனம்.

“கருப்புக்குள் காவியும் அடங்கும்” என்று கமலர் சொன்னதும், யு-டர்ன் அடித்த சில பக்தாள், ஒரு வேளை “ராமானுஜன்” பெயரை ஆண்டவர் சொல்லியிருந்தால், சயனைடை சப்பி தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். என் அனுமானம் சரியாக இருக்குமானால், அந்த காலமும் கூடிய விரைவில் வரும். கமலரை பெரியாரியத்துக்காக ஆதரிக்கும் பக்தாள் கதறுவீர்கள். Wait and see!

தமிழகத்தில் நடக்கும் அரசியல் நகர்வுகள் எல்லாமும் ஆரிய-திராவிடப் போர் என்ற பார்வை ஒரு பக்கம் வியாபித்து இருக்கிறது. ஆனால் இங்கு நடக்கும் சில முக்கிய அரசியல் நகர்வுகளுக்கும், வெட்டு குத்துகளுக்கும் அடி நீரோட்டமாக (under current) சைவ-வைணவ அரசியல் இருந்து வருகிறது என்பது என் தனிப்பட்ட பார்வை. இதை மறுப்பவர்களுக்கு நான் பல உதாரணங்களை அடுக்க முடியும்.

தமிழகத்தில் வீரசைவர்களின் அணி திரட்டல் என்று வெளிப்படையாக பேசவும் எழுதவும் ஆரம்பித்துள்ளார்கள். இங்கு தான் கமலஹாசரின் அரசியல் வருகை முக்கியத்துவம் பெறுகிறது. இது இன்னும் சில மாதங்களில் – வருடங்களில் வெளிப்படையாக பேசப்படும்; எழுதப்படும்; விவாதத்துக்குள்ளாகும்.

நான் கமலை பற்றி எழுதினால் அதில் வந்து ரஜினிகாந்த்தை வம்பிழுக்கும் மகான்களுக்காக எக்ஸ்டராவாக இதையும் எழுதுகிறேன்.

ரஜினியை #போர் என்று வார்த்தையை வைத்துக்கொண்டு விமர்சிக்கும் பக்தாளுக்கு தெரியாத விஷயம் இது தான். இப்போது கமலர் செய்வதும் போர் தான். சைவ-வைணவ போர் என்பது சில நூற்றாண்டு கால நேரடிப் போர், ஆயிரம் ஆண்டு காலமாக வாழ்ந்து இன்றும் நீடிக்கும் ஒரு மறைமுகப் போர்.

உங்களுக்கு தெரியாவிட்டால், “படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே” என்ற வைணவ திருப்பல்லாண்டு வரியை நினைவூட்டுகிறேன்.

அதை நான் இட்டுக்கட்டி சொல்லவில்லை. ஸ்ரீரங்கத்து ரங்கராஜன் எனும் வாலிபக் கவிஞன் வாலி எழுத, ஹரிஹரன் பாட, பரமக்குடி பார்த்தசாரதி ஐயங்கார் (எ) கமலஹாசர் படைத்த ‘தசாவதாரம்’ படத்தில் “கல்லை மட்டும் கண்டால்” பாடலில் இந்த வரி ஒலிக்கும் இடம் மிக முக்கியமானது.

பாஞ்சசன்யம் = சங்கொலி = போர் முழக்கம்.

“திருப்பல்லாண்டு” என்பது வைணவர்களின் வேதமான நாலாயிர திவ்யப்பிரபந்தத்தின் முதன்மை பாசுரங்களாக பெரியாழ்வார் இயற்றியவை.

ராமானுஜர் நாலாயிர திவ்யப்பிரபந்தம் தொகுப்புக்கு சூட்டிய மற்றொரு பெயர், #திராவிடவேதம்.

கமலஹாசர் பேசும் திராவிடம் இது தான்.

புரியலையா? போக போக புரியும்…!

KARTHIK RANGARAJAN

 

Read previous post:
0a1c
ரஜினியின் ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகிறது!

தனுஷ் தயாரிப்பில், லைக்கா வெளியீட்டில், ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' திரைப்படம், வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. வணிக ரீதியில் வெற்றி பெற்ற

Close