எம்ஜிஆர் வளர்த்த கட்சிக்கு நம்பியார் என்ற வில்லன் எப்போதும் தேவைப்படுகிறார்!

ஓ.பி.எஸ்ஸையும், ஈ.பி.எஸ்ஸையும் வளைத்த பா.ஜ.கவால் சசிகலாவையும், தினகரனையும் வளைக்க முடியாதா? ஏன் செய்யவில்லை? அவர்கள் ஒன்றும் திராவிடப் போர்வாள் எல்லாம் கிடையாது. சங்கர மடத்திற்கு தினகரன் போனாரா, இல்லையா? சரணடையத் தயாராகத் தானே இருந்தார்கள்? ‘தூது போ செல்லக் கிளியே’ எனத் தொடர்ந்து ஆள் அனுப்பிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

நமது எம்.ஜி.ஆரில் இருந்து மருது அழகுராஜின் டிஸ்மிஸ் கடிதத்தில் மோடியா கையெழுத்து போட்டார்? கண்டிச்சு வைக்கிறோமென ஒரு வார்த்தையில் சொல்லி முடித்திருக்கலாமே? கும்பிடத்தானே சொன்னார்கள். நெடுஞ்சாண்கிடையாக விழுந்தது யார்? பின்னால் பெரிய சக்தியாக வளர்ந்து விடுவார்கள் என்கிற பயம் பத்து சதவீதம் இருக்கலாம். மறுப்பதிற்கில்லை.

இவ்வளவு சமரச தூதுகளுக்குப் பிறகும் பிஜேபி ஏன் மூர்க்கமாகத் துரத்துகிறது? இப்படி ஒரு குடும்பத்தையே அரசாங்கம் துரத்துகிற போது ஊரே கொதித்து எழுந்திருக்க வேண்டாமா? அந்தக் குடும்பம் வெறுப்பின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர் வளர்த்த கட்சிக்கு நம்பியார் என்கிற வில்லன் எப்போதும் தேவைப்படுகிறார். கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் ஜெ சாவிற்கு அந்தக் குடும்பம்தான் காரணம் என உறுதியாக நம்புகிறார்கள். அதனால்தான் தர்மயுத்தத்தின் இரண்டு பார்ட்டிலும் ஜெ சாவுக்கு நீதி விசாரணை என்கிற பிரம்மாஸ்த்திரம் வீசப்படுகிறது.

இது பிஜேபிக்கும் நன்றாகத் தெரியும். இந்தக் குடும்பத்திற்கு சப்போர்ட் செய்தால் ஒட்டுமொத்த வெறுப்பும் அந்தக் கட்சி மீதும் திரும்பி விடும் என்பது தெரியும். இல்லாவிட்டால் எப்போதோ ரிங் மாஸ்டர்கள் இந்தச் சிங்கங்களையும் பழக்கி இருப்பார்கள்.

சசி டீமை ஜெயிலில் போட்டதற்காகவே பிஜேபியை ஆதரிக்கிறவர்கள் இருக்கிறார்கள். உண்மையா, பொய்யா என்று நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள். உண்மையில் அவர்கள் தங்க முட்டையிடும் விஷயத்தில் வயிற்றை வெகு சீக்கிரமாகவே அறுத்து விட்டார்கள். இப்போது இந்த ஆட்சியை அறுத்தால் அந்தமான் சிறைதான் என்பதை சிறைப் பறவைகள் உணர்வார்கள்.

ஜெ உயிரோடு இருந்தபோது பொம்மை போலக் காட்டியதை மன்னித்து விட்டார்கள். ஒரு பொம்மை போல அவர் உடலை சட்டென காட்டியதை மன்னிக்கவே மாட்டார்கள். மேலூர் கூட்டத்தைப் பற்றியெல்லாம் விவரம் புரிந்தவர்களுக்குத் தெரியும். நகர்ப்புறங்களில் எப்படி இருக்கிறது என எனக்கு உண்மையிலேயே தெரியாது.

கிராமப்புறங்களில் இந்தக் கேள்வியோடு பலரைச் சந்தித்து தூற்றல்களுடனான பதில்களைப் பெறுகிறேன். “ஆறு மாசத்தில அந்த சசிகலா பொம்பளை வெளியே வந்துடுமா தம்பி” என உண்மையிலேயே வருத்தப்படுகிறார்கள். எங்கே போஸ்டர் ஒட்டினாலும் சாணி அடிக்கிறார்கள் என்பதற்காக ஒரு ஊரில் மலையின் மேல் போய் ஒட்டியிருக்கிறார்கள். அங்கே ஏறிப் போய் ஒட்டியவர்கள் அதே வன்மத்தோடுதான் காத்திருக்கிறார்கள்.

வெறுப்பின் பாதையைக் கடப்பது எளிதானதில்லை. தலைமுறை கடந்து தம் மீது படிந்த கரிய நிழலை அகற்றப் பாடுபட வேண்டும். தினகரன் பாவ மூட்டையைச் சுமக்கும் தலைமுறையாகத்தான் கருதப்படுகிறார்.

இந்த ஒட்டுமொத்த கதையிலும் வில்லன்களாக அவர்களை மட்டும் தமிழகம் முன்னிறுத்துவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம்தான். ஆனால் சாதக தத்துவம் அவர்களுக்கு எதிராக இருக்கிறது. வில்லன்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களை ஹீரோவாக பார்ப்பதுதானே தமிழ்க் குல வழக்கம். அதைத்தான் பிஜேபி செய்து கொண்டிருக்கிறது. தவறிருந்தால் சொல்லுங்கள், உண்மையிலேயே திருத்திக் கொள்கிறேன்.

மற்றபடி இணைப்பிற்கும் மேல் இன்னொன்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த இன்னொன்று உடனடியான ஆட்சி மாற்றம் என எதிர்க்கட்சிகள் நம்பப் ப்ரியப்படுகின்றன. கனவு காண எல்லோருக்கும் உரிமை இருக்கிறதுதானே?

SARAVANAN CHANDRAN

 

Read previous post:
0a1c
அதிமுக அணிகள் சமரச பேச்சு: “காக்கிநாடா எனக்கு! பாவாடை நாடா உனக்கு!!”

ஒரு படத்தில் ரவுடியாக வரும் விவேக், மாமூல் வசூல் மற்றும் அராஜகம் செய்வதில் தனக்கும் தாதா சுமனுக்கும் இடையே பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக, “காக்கிநாடா எனக்கு, பாவாடை

Close