“மூடு டாஸ்மாக்கை”: திரண்டது மக்கள் வெள்ளம்!

“ஏதென்று தெரியாத இடத்தில்..

ஏதென்று தெரியாத நேரத்தில்..

என் தந்தை பெயரென்னவென்பதே அறியாமல்..

என் தாயின் பெயரென்னவென்பதையும் அறியாமல்..

மதுவருந்தி மயங்கிக் கிடந்தேன்…  ”

– கரநாதன் நாவேர் நாட்டுக்களறி கலைக்குழுவின் பாடல் வரிகளில் இருந்து..

போராடும் மக்கள் திரளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள மொழியும், கலாச்சாரமும், பூகோள இடைவெளியும் தடைகளே அல்ல என்பதை, கேரளத்தின் ஆலப்புழாவில் இருந்து வந்த அந்த கலைக்குழு பாடிய பாடல்கள் உணர்த்தின. பார்வையாளர்களின் மொழி பாடகனுக்குத் தெரியாது; பாடகனின் மொழி பார்வையாளர்களுக்குத் தெரியாது. எனினும் எவரும் எழுந்து செல்லவில்லை; கூட்டம் சலசலக்கவில்லை… ஆழ்ந்த அமைதியில் ஏறி இறங்கும் பாடலின் தாள லயத்தில் மக்கள் கட்டுண்டு கிடந்தனர். அங்கே உணர்வுகளின் பரிமாற்றம் ஒரு உயர்ந்த தளத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

திருச்சியில் 2016 பிப்ரவரி 14ஆம் தேதியன்று நடந்தது “ஊருக்கு ஊரு சாராயம்! கதறுது தமிழகம்! – மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாடு”. ஓட்டுக் கட்சிகளின் அலங்கார அலப்பறைகளோ, குவாட்டர்-கோழி பிரியாணி கும்பலையோ இங்கு நீங்கள் காண மாட்டீர்கள் என்ற எல்லோரும் அறிந்த உண்மைக்குள் மீண்டும் ஒருமுறை புகுந்து புறப்பட விரும்பவில்லை. மாநாட்டின் சில உணர்வார்ந்த தருணங்களை பரிமாறிக் கொள்வதே எமது விருப்பம்.

தஞ்சை ரெட்டிபாளையத்திலிருந்து வந்திருந்த ஜான் பீட்டர் – கலா தப்பாட்டக் குழுவினரின் நிகழ்ச்சியோடு 14ஆம் தேதி மாலை மாநாடு துவங்கியது. அவர்களின் ஆக்ரோஷமான அடவுகளும் நரம்புகளைப் பிடித்து மீட்டும் பறையோசையும் மாநாட்டுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களை சுமார் அரை மணி நேரம் கட்டிப் போட்டது. மாநாட்டில் தொடர்ந்து வரப்போகும் நிகழ்ச்சிகளுக்கும், உரைகளுக்கும் மக்களின் மனங்களை அந்தப் பறையோசை தயார்ப்படுத்தியது.

க்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் மாநாட்டைத் தலைமை வகித்து நடத்தினார். சென்னையைச் சேர்ந்த உதவும் கைகள் என்கிற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்தி அம்மாள் முதல் உரையை நிகழ்த்தினார். அவர் தெருவோரங்களில் கிடக்கும் அடையாளம் தெரியாத அநாதைப் பிணங்களை அடக்கம் செய்வதற்கே தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் அடக்கம் செய்தவர்களில் சுமார் 70 சதவீதம் மதுவால் இறந்தவர்கள். அவற்றில் பல பிணங்களை பல இடங்களில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளின் வாசலில் வைத்தே கைப்பற்றியுள்ளார்.

அநாதைப் பிணங்களை உற்பத்தி செய்யும் நதிமூலங்களில் பிரதானமானது என்பதை உணர்ந்தபின் தனது சேவையை மாற்றிக்கொண்டு மது ஒழிப்பிற்காக போராடி வருகிறார். சமீபத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி நீண்ட நடைபயணம் ஒன்றை நடத்தி முடித்த அவர், அதன் அனுபவங்களைப் பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். மதுக் கொடுமையால் இளம்வயதிலேயே கணவனை இழந்த பெண்கள், பிள்ளைகளை இழந்த தாய்மார்கள், தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் மதுவின் தாக்கத்தால் இழைக்கப்படும் குற்றங்கள் குறித்து விவரித்தவர், இந்த மாநாடு வரை தமது அணுகுமுறை அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாக இருந்தது என்றும் இதற்கு மேலும் மதுவிலக்கை அமல்படுத்தவில்லை என்றால் இந்த மாநாட்டிற்குப் பிறகு தமது அணுகுமுறையே மாறும் என்றும் அரசுக்கு எச்சரிகை விடுத்தார்.

மாநாட்டின் அடுத்த உரை மொத்தக் கூட்டத்தையும் உறைய வைத்தது.. திருப்பூர் நாகராஜின் வாழ்க்கையின் வலி மிகுந்த பக்கங்களை உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறோம்.

நாகராஜ் திருப்பூரைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, முன்னாள் குடி அடிமை, பள்ளிக்குச் செல்லும் இரண்டு குழந்தைகள் உண்டு. “குடி அடிமை” என்கிற இரண்டே இரண்டு வார்த்தைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் எவ்வளவு தெரியுமா? தான் சம்பாதித்த கூலி அத்தனையையும் குடித்தே தீர்ப்பது நாகராஜின் வழக்கம். இதன் காரணமாக மனைவியோடு தொடர்ந்து சண்டை.

நாகராஜின் குடிப்பழக்கத்தை எத்தனை போராடியும் மனைவியால் நிறுத்த முடியவில்லை. ஒரு நாள் வழக்கம் போல கையிலிருந்த கூலிக் காசு மொத்தத்திற்கும் குடித்துவிட்டு வந்து வீட்டுக்குள் நினைவிழந்து விழுந்துள்ளார். வெறுத்துப்போன மனைவி  மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தன்னையே கொளுத்திக் கொள்கிறார். நெருப்பின் ஆங்காரம் அலறலாக பீறிட்டபோது தட்டுத் தடுமாறி விழித்துப் பார்த்த நாகராஜுக்கு என்ன செய்வதென்று தெரியாத அளவுக்குப் போதை தலைக்கேறியிருந்தது.

மனைவி நெருப்பில் உருகிக்கொண்டிருப்பதைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அருகே சென்று நெருப்பை அணைக்க முற்பட்டுள்ளார்… தீச்சூவாலைகளின் தீவிரத்தில் தன்னைத் தொட்ட ஏதோவொன்றை இறுக்கியணைத்துள்ளார் அந்தப் பெண். அது நாகராஜின் உடல் தான். அடுத்து என்ன நடந்ததென்று நாகராஜுக்குத் தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்தபோது அவர் அரசு மருத்துவமனையின் படுக்கையில். நெருப்பு அவரையும் உருக்குலைத்துப் போட்டிருந்தது; அவரது விரல்கள் மெழுகைப் போல் உருகிப் போயிருந்தன. ஐந்து விரல்கள் இருக்கவேண்டிய இடத்தில் வெறும் இரண்டு விரல்கள்.. கூட்டத்தைப் பார்த்து அந்தக் கையை உயர்த்திக் காட்டினார். அத்தனை பேர்களின் கண்களிலும் கண்ணீர்.. மூன்று மாதங்கள் கழித்தே அவரது மனைவி இறந்துவிட்டதை அறிகிறார். இந்த செய்தியைக் கேட்பதற்காகவே அந்த மூன்று மாதங்களாக அவர் மனப்பிறழ்வுக்கு ஆளாகிய நிலையில் நெருப்பால் வெந்த உயிரை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்.

“ஒரு காலத்திலே கையில இருந்த காசு தீர்ற வரைக்கும் குடிச்சவனுங்க. எம்பட கிட்ட வாங்கிக் குடிச்சவன் எத்தனையோ பேரு.. இன்னிக்கு என்னோட கை இப்படியாகிப் போச்சு.. என்னால வேலை செஞ்சி சம்பாரிக்க முடியாது.. என்ற புள்ளங்க, ‘அப்பா… பசிக்குதுன்னு’ கேட்டு அழுவுதுங்க.. பால் வாங்கிக் குடுக்க காசில்ல.. பிச்சையெடுக்க மனசில்ல..”

நிறுத்திவிட்டுத் தேம்பினார். சரியாக அந்த நேரத்தில்.. கூட்டத்திலிருந்த மக்கள் பொன்மனச் செல்வியாம் புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சியைக் குறித்து ஆவேசக் குரலில் சொன்ன சங்கதிகளுக்கு  ஏழெட்டு தேச துரோக வழக்குகள் உறுதி. நாகராஜ் தொடர்ந்தார்.

“என்னோட புள்ளைக்கு ஒடம்பு சரியில்லெ.. ஆசுபத்திரிக்கி கூட்டிட்டுப் போக வர அஞ்சு ரூபா ஆகும்… அதுக்கு காசில்லாதனா போயிட்டேன்” மீண்டும் உடைந்தார் நாகராஜ்.. ஒரு சிறிய மௌனத்திற்குப்பின் டாஸ்மாக்கை எப்படியாவது மூடி விடுங்களென்று மக்களிடம் கேட்டுவிட்டு அமர்ந்தார்.

இனி எவனுக்காகவும் காத்திருக்கப் போவதில்லை.. இது எங்கள் ஊர்; எங்கள் வாழ்க்கை; எங்கள் தீர்மானம்; டாஸ்மாக்கை மூடியே தீருவதென்கிற உறுதியை மக்கள் அடைந்திருந்தனர். எனினும் அது போராட்டமின்றிச் சாத்தியமில்லை.. ஆனால் போராட்டங்களோ மாலை நேரத்தேனீர் போல அத்தனை ரசமான அனுபவங்களாய் இருக்கப் போவதில்லை. தோழர்களுக்கு இது பழகியது தானென்றாலும் மக்களுக்கு இது புதிது. நரகத்தின் மத்தியில் நிற்பவர்களுக்கு கடினமான பாதை ஒன்றை கடந்தால் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பது தெரிந்து விட்டது.. அந்தப் பாதையைக் கடப்பதெப்படி? தனது அனுபவத்தின் மூலம் அதை விளக்கினார் மது ஒழிப்புப் போராளி டேவிட் ராஜ்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் ராஜ் ஒரு முன்னாள் இராணுவ வீரர் மட்டுமின்றி வாள் வீச்சில் தேசிய சேம்பியன். இந்த தேசத்திற்காக ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு பதக்கம் வெல்ல வேண்டும் என்பது அவரது லட்சியம். இராணுவத்தில் இருந்துகொண்டே அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தான் அவரது தந்தை குடிக்கு அடிமையான தகவல் அவரை அடைகிறது. உடனடியாக ஊருக்கு வந்தவர் தந்தையின் நிலை கண்டு மனம் பதைக்கிறார். இது அவரது பிரச்சினை மட்டுமில்லை என்பதையும் இங்கே ஒரு சமூகமே குடி நோயின் பிடியில் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்ட ரீதியில் சிக்க வைக்கப்பட்டுள்ளது என்பதையும் உணர்கிறார். குடி உடல் நலனை மட்டுமில்லாமல் மன நலனையும் அழித்து ஒரு மனிதனை சிந்திக்க முடியாத வாழும் பிணங்களாக்குகிறது என்ற உண்மையை டேவிட் ராஜ் உணர்ந்துகொண்டு தனது இராணுவ வேலையை இராஜினாமா செய்துவிட்டு ஊரிலேயே ஒரு விளையாட்டு மையம் ஒன்றைத் துவங்குகிறார் – அதோடு மது ஒழிப்புப் போராட்டங்களிலும் கலந்து கொள்கிறார். சசி பெருமாளைப் பின்பற்றி மது ஒழிப்புப் போராட்டக் களத்திற்கு வருகிறார்.

அபினியால் தங்களை அடிமைப்படுத்தியுள்ளனர் என்பதை உணர்ந்த சீன மக்கள் தமது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை அபினி யுத்தத்திலிருந்து துவங்கினர். வெள்ளை ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடிகளான சீன ஆளும் வர்க்கமும் அதை வெறும் போதைப் பழக்கத்திற்கு எதிரான சமூக சீர்திருத்த நடவடிக்கையாகப் பார்க்கவில்லை. மக்கள் போதையிலிருந்து விடுதலை அடைவதை தங்கள் அதிகாரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகவே எடுத்துக்கொண்டு, கொடூரமான முறைகளில் அந்தப் போராட்டங்களை எதிர்கொண்டது சீன ஆளும் வர்க்கம். ஆளும் வர்க்கங்களின் சிந்தனைப் போக்கு மக்களைக் கிள்ளுக்கீரைகளாகப் பார்ப்பது எனபது உலகம் தழுவிய அளவிலும் நூற்றாண்டைக் கடந்த பின்னும் ஒன்றே போல் தான் உள்ளது என்பதை தமிழக போலீசு உணர்த்தியது.

மது ஒழிப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட டேவிட் ராஜை சட்டவிரோதமாக கைது செய்த போலீசு, அவரை வேனில் வைத்தே கொலை வெறியோடு தாக்கியுள்ளது. கைது செய்யப்பட்டு ஆறு மணிநேரம் கழித்து நீதிமன்றத்தில் டேவிட் ராஜை ஆஜர்படுத்திய போலீசு, இந்த இடைவெளிக்குள் அவரது இடுப்பு எலும்பை அடித்தே உடைத்திருந்தது. சில மாதங்கள் எந்த அசைவுமின்றி படுக்கையிலேயே கிடப்பது என்பது எவ்வளவு நரக வேதனையை அளிக்கும் என்பதை வேறு எவரையும்விட விளையாட்டு வீரர்களே உணர முடியும். உடலின் ஆற்றல் அத்தனையும் வடிந்துபோய் சொந்த பராமரிப்புக்குக்கூட இன்னொருவரின் தயவை நாடி நிற்கும் அவல நிலை அது.

டேவிட் ராஜ் அதைக் கடந்து வந்தார். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரித்த டேவிட் ராஜ், தன்னை இயக்கிய உணர்ச்சி ஒன்றே ஒன்று தானென்றார். அது தமிழக இளைஞர் சமுதாயத்தை போதையின் பிடியிலிருந்து விடுவித்தே தீருவது என்கிற வெறி. போலீசு மிருகங்களின் அடியும் உதையும் லட்சிய உறுதி கொண்ட ஒருவருக்கு வலியைக் கொடுப்பதில்லை – மாறாக போராளியின் எஃகு போன்ற உறுதியைக் கொடுக்கிறது.

டேவிட் ராஜ் விளையாட்டில் சாதிக்க வேண்டும், ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற தனது பழைய லட்சியங்களை தூக்கிப் போட்டுவிட்டு மக்களை விடுவிக்க வேண்டும் என்கிற உயரிய லட்சியத்தை வரித்துக் கொண்டார். அதற்கு அடையாளமாக அவர் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் வாள் வீச்சில் பெற்ற சான்றிதழ்களை மேடையின் மீதே தூள் தூளாக கிழித்தெறிந்தார். மதவெறிக்கு எதிராக மத்திய அரசு வழங்கிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்த ஆளும் வர்க்கங்களின் மனசாட்சியை உலுக்கிய சொரணைமிக்க அறிஞர்களின் வரிசையில் துணைக்கண்டத்தின் தென் கோடியிலிருந்து இன்னுமொரு இளைஞன். சான்றிதழ்களைக் கிழித்துப் போட்டு, அந்த வரிசையில் சேர்ந்திருப்பதோடு செயலில் இறங்கியதன் மூலம் முன்னுதாரணமாகவும் திகழ்கிறான்.

டேவிட் ராஜ் கிழித்தெறிந்த சான்றிதழ்கள் காற்றில் அலைந்து தரையைத் தொட்டபோது மேடைக்குப் பக்கத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் சிலரின் கண்களில் கண்ணீர் வழிந்ததைக் காண முடிந்தது. ஒருவேளை அவர்களும் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் சீருடைப் பணியாளர்களாக வேலைக்குச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.. அங்கீகாரம் பெற்ற மாநில, தேசிய சான்றிதழ் ஒன்றைப் பெறுவதன் வலி என்னவென்பதை உணர்ந்த அவர்களுக்கு டேவிட் ராஜின் லட்சிய உறுதியின் அடர்த்தி உறைத்திருக்கும்.

பாதையில்லாத பாதையில் முதலில் நடப்பவரே அத்தனை முட்களையும் தாங்கிக் கொள்கிறார். அவரைப் பின்தொடர்பவர்களும் அந்த வலியில் கொஞ்சம் பங்கு பெற்றுக் கொள்கிறார்கள்.. காலங்கள் கழித்து அங்கே பாதை உருவானபின் வருபவர்களின் கால்கள் முதலில் நடந்தவர்களின் வலியைப் புரிந்து கொள்ளுமா? நமது எதிர்கால சந்ததியினருக்கான முள்ளில்லாத பாதை சமைக்க நம்மில் எத்தனை பேர் தயாராக உள்ளோம்?

இதோ நமக்கு முன்னோடிகளாக டேவிட் ராஜ் மட்டுமில்லை.. குமரிக்கு வடக்கே இருக்கும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வக்கண்ணும் இருக்கிறார். மேலப்பாளையூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு பொய்வழக்கை சந்தித்து முப்பது நாட்கள் சிறையில் கழித்த பதினைந்து பேரில் ஒருவரான் அவருக்கு, அதற்குமுன் அவ்வமைப்போடு எந்த தொடர்பும் கிடையாது.

இப்படியான உறுதியான போராளிகள் பலரை எமது அமைப்புக்கு அறிமுகம் செய்து வைக்கும் பொன்மனச் செம்மல், குடி வியாபாரி புரட்சித்தலைவிக்கு இந்த இடத்தில் ஒரு நன்றி.

தெய்வக்கண்ணுவோடு சேர்ந்து மொத்தம் நான்கு சகோதரர்கள். அரசாங்கத்தின் ஆலோசனையை நம்பி ஒவ்வொருவரும் ஒற்றைப் பிள்ளைகளாக பெற்று வைத்துள்ளனர். அந்தச் சகோதரர்களில் ஒருவருக்குப் பிள்ளையில்லை. தெயவக்கண்ணுவின் தம்பி மகன் டாஸ்மாக் அடிமை. குடிவெறியில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் அந்த இளைஞனை பறிகொடுத்த அந்தக் குடும்பம் வாரிசின்றி நிர்கதியாய் நிற்கிறது. தனது குடும்பத்திற்கு இந்த அரசு வழங்கிய அநீதிக்கு எதிராக குமுறிக்கொண்டிருந்த தெய்வக்கண்ணு மக்கள் அதிகாரம் நடத்தும் போராட்டம் குறித்து கேள்விப்பட்டு பங்கெடுத்துக் கொள்கிறார்.

மேலப்பாளையூர் டாஸ்மாக் மக்களின் கோபக் கனலில் இழுத்து மூடப்படுகிறது. ஆத்திரம் கொண்ட அதிகாரிகள், பொய்வழக்கில் போராட்டத்தில் முன்நின்றவர்களைக் சிறையில் தள்ளுகிறார்கள். தனது சிறை அனுபவம் நிறைய புதிய விசயங்களைக் கற்றுக் கொடுத்தது என்று தெரிவித்த தெய்வக்கண்ணு, குடியால் தனது கிராமத்தினர் அடைந்த துன்பங்களைப் பட்டியலிட்டார். பெண்களுக்கு குடிப்பழக்கமில்லாத மாப்பிள்ளைகள் கிடைப்பதில் உள்ள சிரமங்களைச் சொன்னவர்.. பல பெண்களுக்கும் ஆண்களுக்கும் இதன் காரணமாகவே திருமணம் நடப்பது தடைபட்டுள்ளதை விவரித்தார்.

தானே 23 மாப்பிள்ளைகளைப் பார்த்துக் கொடுத்துள்ளதாகவும், அதில் 17 பேர் குடிகாரர்கள் என்றும் மீதியுள்ள 6 பேரும் எப்போது குடிக்கத் துவங்குவார்களென்று தெரியாது என்றும் வேதனைப்பட்டார். இது எங்கள் ஊர்.. .இங்கே சாராயக் கடை வேண்டாம் என்றும் நாங்கள் சொல்கிறோம் – திறப்பேன் என்று சொல்ல கலெக்டர் யார்? மக்களின் தாலியறுக்கும் இந்தப் பொம்பளை சொந்தக் கட்சிக்காரனுக்கு தாலியெடுத்துக் கொடுக்கிறதே.. அந்தக் குடும்பங்கள் விளங்குமா என்று ஒரு விவசாயிக்கே உரிய எளிய தர்க்கத்தை முன்வைத்தபோது காவலுக்கு நின்றுகொண்டிருந்த ஆய்வாளர் தனது தொப்பியைக் கழட்டி தலையைக் கவிழ்த்தார்.

ஐம்பதுகளில் இருக்கும் அந்த போலீசுக்கு  குடிக்கும் ஒரு பொறுக்கி மகனோ அல்லது குடிகாரக் கணவனால் துன்புறுத்தப்படும் பெண்ணோ இருந்திருக்கலாம்.. அந்த வேதனையை ஒரு தகப்பனாக அவர் அந்த சந்தர்ப்பத்தில் உணர்ந்திருக்கலாம்.. அவரிடம் மட்டுமின்றி காவல் பணியில் ஈடுபட்டிருந்த மற்ற கீழ்நிலைக் காவலர்கள் முகங்களிலும் ஒருவித குற்ற உணர்ச்சியைக் காண முடிந்தது.. அது ஒருவேளை டாஸ்மாக் வாசலில் குடிகாரர்களுக்கும் சரக்குக்கும் சால்னாவிற்கும் காவலாக நின்றதன் காரணமாக ஏற்பட்ட உறுத்தலாக இருக்கலாம் – அல்லது சமூகம் சமூகம் என்று சொல்லப்படுவதில் தாங்களும் ஒரு அங்கம் என்று துளியாக உணர்ந்த தருணமாகவும் இருக்கலாம்.

சரக்குப் பார்ட்டிகளின் முன் கவிழ்ந்த அந்த விரைத்த தொப்பிகளின் உணர்ச்சிகள் எப்படி இருந்திருக்கும்? அதை மையம் கலைக்குழு நடத்திய நாடகம் காட்சி வடிவிலேயே நம் கண்முன் நிறுத்திக் காட்டியது. போலீசின் தொப்பி மட்டுமா, நமது அமைச்சர்களின் முதுகுத் தண்டுவடங்கள் அனுபவிக்கும் துன்பத்தையும் விவரித்த அந்த நாடகத்தைக் காணாதவர்கள் வரப்போகும் மாநாட்டு சி.டியை வாங்கிப் பார்த்து இரசிக்கலாம்.

சிறப்புரை நிகழ்த்திய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையனும் தனது உரையில் ”போலீசே உணர்ந்துவிட்டதால் இனி மற்றவர்களுக்கு உணர்த்துவது அத்தனை சிரமமில்லை” என்று குறிப்பிட்டார். மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மக்கள் அதிகாரத்தின் அரசியலையும் அதன் தேவையையும் ஏற்கனவே பேசிவிட்டதையும், அதன் காரணமாக நேரம் குறைவு என்பதையும், பத்து மணிக்கு மேல் பேசுவது ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பதையும் குறிப்பிட்டு, தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார் தோழர் மருதையன்.

மாநாட்டின் மற்றொரு சிறப்புரையாளரான மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, இது இன்னுமொரு வழமையான மாநாடு இல்லை என்பதால் இங்கே மாநாட்டுத் தீர்மானங்கள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டார். மதுவிலக்குக் கொள்கையில் ஓட்டுக் கட்சிகளின் பித்தலாட்டங்களை குறிப்பிட்டவர், தமிழக மக்கள் தேர்தலுக்காக காத்திருக்காமல் உடனடியாக களத்தில் இறங்கி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதே இம்மாநாடு விடுக்கும் அறைகூவல் என்றார்.

எங்கெல்லாம் மக்கள் தங்கள் பகுதியிலிருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பைத் தொடர்பு கொண்டால் தலைமையேற்று வழிநடத்த தயாராக இருக்கிறோம் என்பதையும் குறிப்பிட்டார். மேலும், ஒரு அமைப்பு என்கிற முறையில் தோற்றுப்போன இந்த அரசு நிர்வாகம் நமது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து டாஸ்மாக்கை மூடும் என்று நம்பத் தேவையில்லை என்றார் ராஜு. மேலும், ஜெயலலிதா காட்டும் இரட்டை இலை சின்னத்தில் ஒரு இலை போலீசு என்றால் இன்னொரு இலை போதை என்பதைக் குறிப்பிட்டவர், போதைக்கு அடிமையாக்கி மக்களை மூடத்தனத்தில் ஆழ்த்து, மறுப்பவர்களைப் போலீசைக் கொண்டு வீழ்த்து என்பதே இந்த அரசின் கொள்கை என்பதை குறிப்பிட்டார்.

நமது ஊரில் நமது விருப்பத்திற்கு மாறான ஒன்றை ஏன் அனுமதிக்க வேண்டும்? குடி கெடுக்கும் டாஸ்மாக்கை மக்கள் திரளாக நின்று எதிர்த்தால் அரசின் குண்டாந்தடியான போலீசால் என்ன செய்துவிட முடியும் என்று கேள்வி எழுப்பியவர், ஐந்து மாவட்ட போலீசை இறக்கினால் மக்கள் பீதியடைவார்கள் என்பது அரசின் நம்பிக்கையாக இருக்கலாம் ஆனால், ஐந்து மாவட்ட மக்களும் களத்தில் நின்றால் சில ஆயிரம் போலிசால் என்ன செய்து விட முடியும் என்கிற எதார்த்தத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றார். மக்கள் திரள் போராட்டங்களின் வெற்றியை ஏற்கனவே சந்தித்துள்ள மேலப்பாளையூர் டாஸ்மாக் மூடியது, பாலாற்றில் மணல் கொள்ளையைத் தடுத்தது போன்ற போராட்ட அனுபவங்களையும் விளக்கினார்.

கடலூர் கச்சிராயநத்தம் கிராமத்திலிருந்து வந்த மந்திரகுமாரி தனது ஊரை டாஸ்மாக் எப்படி விதவைகளின் கிராமமாக மாற்றியது என்பதை விளக்கினார்.”அம்மாவின் மரண தேசம்” ஆவணப்படத்தின் கதையை அவரது உரை நிகழ்த்தியது. டாஸ்மாக்கை மட்டுமல்ல, பல்வேறு அநீதிகளுக்கும் காவலாய் நிற்கும் நீதித்துறையை அம்பலப்படுத்திப் பேசிய தோழர் வாஞ்சிநாதன், மழலை மொழியில் குடியின் கேடுகளை விளக்கிய சிறுமிகள், கேரளாவிலிருந்து வந்து கலை நிகழ்ச்சி நடத்திச் சென்ற கரநாதன் நாவேர் நாட்டுக்களறி கலைக்குழு என்று மாநாட்டின் நிகழ்ச்சிகள் உணர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தன. மேடையில் டாஸ்மாக்கின் வேதனை  சோகமான பாடலாக மலையாளத்தில் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது தமிழர் கண்ணோட்டம் இதழை விநியோகித்துக் கொண்டிருந்தார் ஒருவர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்குவோம், அதிகாரத்தைக் கையிலெடுப்போம் என்று தெய்வக்கண்ணு பேசிக்கொண்டிருந்தபோது,  மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட நடைமுறை சாத்தியமான வழி குர் ஆனில் இருப்பதாக  துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துக் கொண்டிருந்தார் ஒரு அப்பாவி!

இறுதி நிகழ்ச்சியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடந்தது. டாஸ்மாக் தொடர்பான புதிய பாடல்களோடு நடந்த அந்தக் கலைநிகழ்ச்சியின் விரிவான பதிவு பின்னர் வெளியிடப்படும் என்றாலும், பள்ளி மாணவி பாடிய பாடல் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்..

“அப்பாவைக் கெடுத்திட்டியே ’அம்மா’..

எங்க.. அப்பாவைக் கெடுத்திட்டியே ’அம்மா’… ”

என்கிற பல்லவியோடு துவங்கிய அந்தப் பாடலின் வரிகள் ஒரு பெண் குழந்தையின் பார்வையில் குடிகாரத் தந்தையால் விளையும் துன்பங்களை பட்டியலிட்டது. ஆசையோடு தின்பண்டங்கள் வாங்கிக்கொண்டு நேரத்தோடு வீட்டுக்கு வந்த தன் தந்தையை ஏன் டாஸ்மாக்கைத் திறந்து கெடுத்தீர்கள் என்ற தேம்பும் குரலின் அந்தக் கேள்வி, இதயம் கொண்டோரை உலுக்கும். மற்ற பிள்ளைகளின் தாய் தந்தையரெல்லாம் பள்ளிக்கு வருகிறார்களே.. நான் பாடல் போட்டியில் வென்று பரிசு பெறப் போகும் நிகழ்வுக்கு நீ வருவாயா அப்பா? இருட்டி விட்டதே… எனக்கு அச்சமாக இருக்கிறது.. நீ எங்கே விழுந்து கிடக்கிறாயோ அப்பா..?

நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியெல்லாம் அந்தப் பெண் தோழரின் ஏக்கமான குரல் மனதின் ஆழத்தில் குடைந்துகொண்டே இருந்தது…

ஆனால்.. இந்த பரிதவிப்பெல்லாம் மிடாஸ் முதலாளிகள் உணரமாட்டார்கள்..

உணர்ந்தவர்கள் முன் வாருங்கள்.. நாம் உணர்த்துவோம் என்பதே இந்த மாநாட்டின் செய்தி!

– வினவு செய்தியாளர்கள்

நன்றி: வினவு டாட்காம்