வஞ்சிக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு வேட்பாளர்: திருநங்கை தேவி பேசுகிறார்!

தமிழக சட்டமன்ற தேர்தல்களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், கடலூரில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் அறிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஒவ்வொருவராக அறிவிக்கும்போது, ஒருவரது பெயர் சொல்லும்போது மட்டும் கூட்டம் கைதட்டலில் அதிர்ந்தது. அவர்தான் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் வேட்பாளர் தேவி. அதில் என்ன விஷேசம் என்கிறீர்களா? தேவி ஒரு திருநங்கை. அதுதான் ஸ்பெஷல்.

திருநங்கை சமூகத்தில் இருந்து ஏற்கெனவே பாரதி கண்ணம்மா என்பவர் 2014 நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். ஆனால், ஒரு கட்சியின் வேட்பாளராக ஒரு திருநங்கை முதன்முதலில் அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

விகடன் இணையதளத்திற்காக சந்தித்த செய்தியாளர் மா.அ.பிரபாகரனிடம்  திருநங்கை தேவி கூறியவை:-

திருநங்கை என்கிற பெயரை முதலில் கொடுத்ததற்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். சமூகத்தில் பலவாறான அவச்சொற்கள் மூலம்தான் நாங்கள் அழைக்கப்படுகிறோம். தற்போது அந்த நிலை மாறி வருகிறது. தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் எல்லாம் திருநங்கைகளை உறுப்பினர்களாகச் சேர்த்து வைத்திருக்கிறார்களே தவிர, அவர்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது கொஞ்சமும் இல்லை. எங்களையும், சக மனிதராக நினைத்து, என்னை வேட்பாளாராக அறிவித்து இருக்கும் நாம் தமிழர் கட்சிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடலூரில் என்னை அறிமுகப்படுத்தும் முன்பு வரை, நான் திருநங்கை என்பது யாருக்கும் தெரியாது. என் பெயரை அறிவித்து, ‘தேவி – ஒரு திருநங்கை’ என்று சொன்னபோது மக்களிடம் ஏற்பட்ட கைத்தட்டல்தான் திருநங்கைகள் மீதான சமுதாய சிந்தனை மாற்றுக்கு ஒரு சான்று.

என் சொந்த ஊர் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி. என் தந்தை பெயர் கோவிந்தன். சாதாரண கூலிக்குடும்பம். நான் பதினொரு மாதம் குழந்தையாக இருக்கும்போதே என் தந்தை இறந்துவிட்டார். என் அண்ணன் சிறுவயதிலேயே ஓடிப்போய்விட்டார். என்னுடைய அக்காவும், அம்மாவும்தான் என்னை வளர்த்தார்கள். குழந்தையில் இருந்தே உணவுக்கே மிகவும் கஷ்டப்பட்டேன். மதிய உணவுக்காக  பள்ளிக்கூடம் சென்றேன். சிறுவயதில் இருந்தே உணவும், அன்பும் கிடைக்க மிகவும் கஷ்டப்பட்டேன். அப்பா வாங்கி வைத்திருந்த கடனையும் நாங்கள்தான் கட்டவேண்டிய நிலையில் இருந்தோம்.

12ஆம் வகுப்பு வரைக்கும் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். அந்த சமயத்தில்தான் என்னுள் இருக்கும் பெண் தன்மையை உணரத் தொடங்கினேன். அது  உடல்தோற்றத்திலும் வெளிப்பட்டதால் அந்த சமயங்களில் மிகவும் பாதிக்கப்பட்டேன். அப்போது எங்கள் பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு திருநங்கையின் அறிமுகம் கிடைத்தது. அதன்பின் 18 வயதில் பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு, மீண்டும் வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டேன். முதலில் அம்மா சிறிது வருத்தப்பட்டாலும், அதன்பின் என்னை மனமார ஏற்றுக்கொண்டார்கள்.

10

அதன்பின் சேலம் ‘தாய்’ அமைப்பிலும், ‘விழுதுகள்’ அமைப்பிலும் என்னை இணைத்துக்கொண்டு பணி செய்தேன். குழந்தை கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு, ஆதரவற்றோருக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன். முதியோர் இல்லம் ஆரம்பிக்க நினைத்தபோது, உள்ளூருக்குள் பெரும் எதிர்ப்பு இருந்தது. அதையும் மீறி, எங்கள் ஊரில் சொந்தமாக நிலம் வாங்கி,  ‘தாய்மடி அறக்கட்டளை’ என்கிற பெயரில் காப்பகம் ஒன்றை நடத்திவருகிறேன்.

என்னுடைய அறக்கட்டளைக்காக நிலம் வாங்குவதற்கு பணம் சேர்க்க, சென்னையில் சிறிதுகாலம் வேலை பார்த்தேன். அப்போது தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுத்தவர்களின் நட்பு ஏற்பட்டது. ஈழத்தின் மீது ஆர்வம் வந்து, பல போராட்டங்களில் கலந்து கொண்டேன். 2009 ஈழப்போரில் கொத்துக் கொத்தாக நம் உறவுகள் மடிந்தபோது, மிகவும் பாதிக்கப்பட்டேன். தமிழர்கள் நலன்,  தமிழர்களுக்கு சொந்தமான நாடுகளிலேயே மிகவும் தரக்குறைவான நிலையில் இருப்பதைக் கண்டு மனம் நொந்தேன். மற்ற மாநிலங்களில் எல்லாம் மண்ணின் மைந்தர்கள் ஆண்டு கொண்டிருக்கும்போது, தமிழகத்தில் இருந்த நிலை மேலும் என்னை மனம் நோகச் செய்தது.

திருநங்கைகளுக்கு இன உணர்வு இருக்கக்கூடாதா, என்ன? அந்த சமயத்தில், நாம் தமிழர் இயக்கத்தில் ஆர்வம் ஏற்பட்டு, அவர்களுடன் இணைத்துக்கொண்டேன். அப்படியே அவர்களுடனான பயணத்தில் இருந்தபோது, தேர்தலுக்கு அண்ணன் சீமான் வேட்பாளர் தேர்வு செய்கிறார் என்று தெரிந்தபோது, என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.

திருநங்கையாகப் பிறந்த இந்த சமூகத்தில் பலர் ஏகப்பட்ட இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். எனக்கு அந்த சூழ்நிலை இல்லை. இருந்தாலும், அப்படி பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றும் நோக்கில் செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அதனால்தான் தேர்தலில் போட்டியிட விருப்பப்பட்டேன். நான் சேலம் மாவட்டத்தில் போட்டியிடுவதாகத்தான் அண்ணனிடம் கேட்டிருந்தேன். அவர்தான், என்னை சென்னையில் போட்டியிட தேர்வு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் திருநங்கைகளின் நிலை மற்ற இடங்களைவிட பரவாயில்லை. இருந்தாலும், திருநங்கைகள் என்றால் ஏளனமாகப் பார்க்கும் நிலை இன்னமும் சமூகத்தில் நிலவி வருகிறது. நாங்கள் ஒன்றும் தீண்டத்தகாதவர்கள் அல்ல. இயற்கையின் படைப்பில் நாங்களும் ஒரு பாலினம்தான். இந்த சமூகத்தின் புறச்சாயல்கள்தான் எங்களை சாதாரண மக்களிடம் இருந்து ஒதுக்கி வைத்திருக்கிறது. அதற்கு நாங்கள் மட்டும் காரணம் அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தால், கண்டிப்பாக மக்களுக்காவும், திருநங்கைகளுக்காகவும் பாடுபடுவேன். என்னுடைய வெற்றி என்பது, திருநங்கை சமூகத்தின் வெற்றியாகவே கருதப்படும். வயிற்றுப் பசிக்காகப் பிச்சை எடுக்கும் நிலை என்பது தான் மோசமான விஷயம். அதை மாற்ற என் வாழ்நாள் முழுக்கப் பாடுபடுவேன்.