”எதிர்ப்பு அதிகரிக்கும்; கடுமையாக போராட தயாராகுங்கள்”: பாஜகவினருக்கு பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸ் வலியுறுத்தல்

(குறிப்பு: ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விவகாரத்திலிருந்து ‘மோடி’ என்பது ஒரு சாதிப்பெயர் என்பதை காலதாமதமாகத் தெரிந்துகொண்டோம். ஒருவர் தன் பெயரோடு தனது சாதிப்பெயரை சேர்த்துக்கொள்வதோ, அல்லது அவரை அவரது சாதிப் பெயரால் குறிப்பிடுவதோ கூடாது என்பது நாகரிக மனிதர்களுக்கு பெரியார் கற்றுத் தந்த பாடம். எனவே, பிரதமரின் முழுப்பெயரான ‘ நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’ என்பதிலுள்ள சாதிப்பெயரை நீக்கி, அவரை ‘நரேந்திர தாமோதர்தாஸ்’ என்று குறிப்பிடுவதே ‘புதிய இந்தியா’வின் பிரதமருக்கு கண்ணியமாகவும் கவுரவமாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.)

பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டாம் கட்டத்தில் நடைபெறும் முதல் பாஜக நாடாளுமன்றக் கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸ், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜூ, பாஜக எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதை அடுத்து, அதற்கு முக்கிய காரணமாக இருந்த பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸுக்கு, ஜெ.பி.நட்டா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸ், ”கட்சி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது; வெற்றியின் சுவையை அதிகம் சுவைத்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மற்றொரு பக்கத்தில் எதிர்ப்பும் அதிகரிக்கும். எனவே, கடுமையான போராட்டத்திற்கு தயாராக வேண்டும்” என வலியுறுத்தினார்.

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை மீது விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரே ந்திர தாமோதர்தாஸ் இவ்வாறு பேசியுள்ளார்.