மக்கள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தமிழகத்தில் மீண்டும் தேர்தல்: கமல் கோரிக்கை!
‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்காக அதன் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வன் நடிகர் கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் பேட்டி எடுத்துள்ளார். இன்று (ஞாயிறு) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான மிகவும் நீளமான இந்த பேட்டியில் கமல்ஹாசன் பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அரசியலில் நிகழும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் வெறும் கலைஞனாக மட்டுமே என்னால் இருக்க முடியாது என்று கூறிய கமல்ஹாசன், அநீதிகள் அதிகரிக்கும்போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்றார்.
அரசியல் வர்த்தகமாகிவிட்டது. எளிமையான அணுகுமுறை கொண்ட தலைவர்கள் தற்போது தேவைப்படுகிறார்கள். அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் எனது முதல் தகுதி என்றும் குறிப்பிட்டார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது எரிமலையின் ஒரு நுனிதான். நான் வரி கட்டுகிறேன். ஊழலில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அதை தைரியமாக சொல்வேன். ஊழல் என்பது வாக்காளர்களிடமிருந்தே தொடங்குவதாகக் கூறிய கமல்ஹாசன், வாக்குகளை விலை பேசும்போது கேள்விகளை எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன். காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும். மக்களின் தேவைக்கேற்ப பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய சட்டங்களும் இயற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.
எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டிக்கேட்க வேண்டும். எனக்கு தலைவர்கள் யாரும் கிடையாது. காந்தி, பெரியார் மாதிரியான ஹீரோக்கள் தான் உள்ளனர். ஏனென்றால் காந்தி, பெரியார் இருவரும் தேர்தல் அரசியல் இல்லை. சாதியை நீக்கிவிட வேண்டும் என்பதுதான் எனது கொள்கை, சாதியே இல்லாத சமுதாயம் அமைய வேண்டும். நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன். தமிழகத்தில் புதிதாக தேர்தல் நடைபெற வேண்டும். தங்களுக்குத் தேவையான தலைவரை மக்களே தேர்வு செய்ய வேண்டும் என்றார்.
திராவிட கட்சிகளின் பங்களிப்பு முடிந்து விட்டதாக சொல்ல முடியாது. திராவிடம் என்பது பூகோள ரீதியானது. அதனை யாரும் மறுக்க முடியாது. கொள்கை நேரத்துக்கு நேரம் மாறுபடும். மக்களுக்கு தேவையான அரசியலே தேவை. அந்த அரசியல் காலத்துக்கு காலம் மாறுபடும். காலத்தின் தேவையாக இருந்ததால் தான் திமுக அதிமுக இயக்கங்கள் உருவெடுத்தன.
ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவரிடத்திலும் உள்ளது. எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டி கேட்க வேண்டும். தமிழகத்தில் தேர்தல் வேண்டும். தமிழகத்திற்கு வரும் தேசிய கட்சிகள் திராவிடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் அரசியல் பேசுவதால் மட்டுமே அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. நான் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்கிறேன் என்று தெரிவித்தார்.