ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மநீம ஆதரவு: கமல்ஹாசன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கடந்த 23-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு கோரினார். கட்சி நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவை தெரிவிப்பதாக கமல் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, மநீம செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் மீண்டும் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகளுடன் கமல் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் எனது நண்பரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளிக்க மநீம முடிவு செய்துள்ளது.

இன்றைய அரசியல் சூழலில், மதவாத சக்திகள் முழு பலத்தோடு எதிர்க்கப்பட வேண்டும் என்பதில் சிறிதும் மாற்றுக் கருத்து இல்லை. நாங்கள் தற்போது எடுத்திருப்பது அவசர முடிவு தான். எதிர்வாத சக்திகளுக்கு பலம் கூடிவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்திருக்கும் முடிவு இது.

காலமும், பேச்சும், அரசியலும் மாறிக்கொண்டே இருக்கும். இன்னும் ஓராண்டு கழித்து (நாடாளுமன்றத் தேர்தல்) எடுக்க வேண்டிய முடிவை அவசரப்படுத்தி இப்போது சொல்ல முடியாது. நாளை தேசத்துக்கு என்று வரும்போது, அந்த கோட்டையும் அழிக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனக்கு பிடிக்காத கட்சி என்றாலும்கூட, தேசத்துக்காக அனைவரும் ஒரே மேடையில் அமர வேண்டும்.

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்து, மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். மநீம தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றிக்கு வேண்டிய உதவிகளை நானும், என் கட்சியினரும் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கமல்ஹாசனுக்கு நன்றி: 

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்றைய அரசியல் சூழலில் மதவாத சக்திகள் முழு பலத்துடன் எதிர்க்கப்பட வேண்டியவை என்பதை கருத்தில் கொண்டு, நிபந்தனையற்ற ஆதரவை மக்கள் நீதி மய்யம் வழங்கியுள்ளது. சரியான நேரத்தில், சரியாக முடிவெடுத்த கமல்ஹாசனுக்கு மனப்பூர்வமான நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

Read previous post:
0a1b
’பிக் பாஸ்’ விக்ரமன் உண்மையிலேயே ஒரு ‘தலைவர்’ மெட்டீரியல்!

விக்ரமன் பிக்பாஸ்லாம் தாக்குபிடிப்பாரான்னு சந்தேகப்பட்டேன்; அங்க போய் என்ன பண்ணபோறாரோன்னு நெனச்சேன். But ஏதோ ஒரு வகைல நம்ம சித்தாந்த பிரச்சாரத்துக்கு யூஸ் ஆனா நல்லதுதானேன்னு தோணுச்சி...

Close