காலா – விமர்சனம்

ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல… இடதுசாரிகள், தலித் செயல்பாட்டாளர்கள், இன்னும் சொல்லப் போனால், இந்துத்வவாதிகள் கூட ஆவலாய் எதிர்பார்த்த காலா திரைக்கு வந்து விட்டான்…

ரஞ்சித் படம் என்பதால், கட்டாயம் ஆதரிக்க வேண்டும் என்று சிலரும், ரஜினி படம் என்பதால், ஆதரிக்கக் கூடாதென்று சிலரும், குறுக்கு மறுக்காக ஓடத் துவங்கி, படத்தை பார்த்தால் தவறா, இல்லை பார்க்காவிட்டால் தவறா, என குழப்ப மனநிலையை சகட்டுமேனிக்கு வளர்த்து விட்டார்கள்…

தங்கள் தலைவன் மும்பையில் ஒரு gangster வடிவத்தில் வந்து தூள் கிளப்புவார் என அவரின் ரசிகர்களும், தாராவி விளிம்பு நிலை மக்களின் நிலையை காட்சிப்படுத்துவார் என சமூக செயல்பாட்டாளர்களும் எதிர்பார்த்திருக்க, ரஞ்சித் அனாயாசமாக தன்னுடைய அரசியலை ரஜினி மூலம் வெளிக் கொணர்ந்து, திரை முழுதும் வியாபித்திருக்கிறார்…

படம் நன்றாக ஓடி, இந்துத்வாவுக்கு எதிரான கருத்துக்கள் விதைக்கப்பட்டு விடக் கூடாதென ஒரு புறமும், படம் தோல்வியுற்று, அது தங்களின் புதிய குதிரையான ரஜினியின் சமீபத்திய பேட்டிக்கான மக்களின் எதிர்வினை என அரசியல் படுத்தப்பட்டு விடும் என்ற அச்சம் ஒருபுறமுமாக காவித் தரப்பு ஏகக் குழப்பத்தில் இருந்த நிலையில் பா.ரஞ்சித் தனது வேலையை கச்சிதமாகவே ஆற்றியிருக்கிறார் என்றே தோன்றுகிறது..

ஒரு உச்ச நடிகரின் படத்துக்கான வணிக சமரசங்கள் சில ஆங்காங்கே தெரிந்தாலும், படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை தன்னுடைய முனைப்பு அரசியலை, வசனங்களாகவும், குறியீடுகளாகவும் ரஞ்சித் செவ்வனே காட்சிப்படுத்தி இருக்கிறார்…

ரஜனிக்கு அடுத்து திரைக்கதையில், பெரும் பலம் பெறுபவர்கள் ஈஸ்வரி ராவும், நானா படேகரும்.. சமீப படங்களில் நானா படேகர் போன்ற ஒரு கச்சிதமான வில்லனை நாம் பார்க்கவில்லை….

பின்னணி இசை, படத்திற்கு வலு சேர்க்கிறது. படம் முழுக்க செட்டிங்க்ஸ் என்பதை நம்ப இயலாத வண்ணம், கலை இயக்குநர் தனித்துத் தெரிகிறார்…

படம் நெடுகிலும், உடன் பயணிக்கும் புத்தரும், அம்பேத்கரும் படத்தின் நோக்கத்தை நிறுவுகிறார்கள்…

ஃபிளக்ஸ் போர்டில் காட்டப்படும் வாசகங்கள், எளிதாக “சுவச் பாரத்” திட்டத்தை நினைவுபடுத்துகின்றன…

காலா சேட்டின் மகன் பாத்திரத்திற்கு லெனின் எனப் பெயரிட்டு, அவர் சட்டபூர்வமாக இயங்கி, அநீதிகளை தடுத்து விடலாம் என்று இயங்குவது, இந்தியாவில் இடதுசாரிகள் சம்பிரதாயமாகவே அரசியல் செய்கிறார்கள் என்று காட்சிப்படுத்துவதாக புரிந்து கொள்ளலாம்…இறுதியில் மனு போடுவதும், தன்னார்வ குழுக்களுக்குப் பின்னால் நின்று போராடுவதும் கவைக்கு உதவாது என்ற அரசியலை படம் கற்றுத் தருகிறது…

நானா படேகரை அடிக்கடி காவிக் கொடிகளுக்கூடே காண்பிப்பதும், காலா நிரந்தரமாக கறுப்பு உடை அணிந்திருப்பதும், காலாவின் மேஜையில் ராவண காவியம் புத்தகம் இடம் பெறுவதும், நிலத்திற்கான உரிமை சம்பந்தப்பட்ட காட்சிகளின் பின்புலத்தில் “மனு” என்று எழுதப்பட்டிருப்பதும், தண்டகாரண்யா நகர் என காட்டப்படுவதும், ஹ்யூமா குரேஷி, தான் பீம் நகரில் வசித்ததாகச் சொல்வதும், இறுதிக் காட்சியில் இராமாயண சொற்பொழிவும், தாராவி யுத்தமும், ஒருங்கே நிகழ்வதும், கறுப்பு, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்கள் இணைந்து எதிரியை வீழ்த்துவதுமான படிமக் காட்சியின் மூலம் ரஞ்சித் தான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறார்…

இது பா.ரஞ்சித்தின் படம் மட்டுமே…!

 

Read previous post:
p3
‘காலா’ பார்த்தேன்: பாராட்டுக்கள் பா.ரஞ்சித்!

இன்று (07-06-2018) பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி. ‘காலா’ படம் பார்த்தேன். “இது ரஜினி படமா? இயக்குனர் பா.ரஞ்சித் படமா?” என்ற கேள்விக்கு எனது பதில்: இது ரஜினி

Close