காதல் கசக்குதய்யா – விமர்சனம்

படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நாயகன் துருவா. அவரது தந்தையும், தாய் கல்பனாவும் விபத்து ஒன்றில் சிக்கிவிட, அதில் தந்தை இறந்துவிட, தாய் கோமாவிற்கு செல்கிறார். வேலைக்கு சென்றுகொண்டே, கோமாவில் மருத்துவமனையில் இருக்கும் தாயையும் துருவா பொறுப்புடன் கவனித்துக் கொள்கிறார்.

வெகு நாட்களாக சிகிச்சை பெற்றும் துருவாவின் அம்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், துருவாவின் தாய் மாமா அவரது அம்மாவை கருணை கொலை செய்யச் சொல்கிறார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் துருவா, தனது தாய் விரைவில் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் மனம் தளராமல் இருக்கிறார்.

இந்நிலையில், சிகரெட் பிடிப்பதையே பொழுதுபோக்காக கொண்ட துருவாவை, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான நாயகி வெண்பா பார்க்கிறார். பார்த்த உடனே அவருக்கு துருவா மீது காதல் வருகிறது. அவர் துருவாவை பின்தொடர்ந்து அவரைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். ஒருநாள் துருவாவின் போன் நம்பரையும் திருடி நாயனுக்கு போன் செய்து அவரை காதலிப்பதாக சொல்லி நேரில் சந்திக்க வரச் சொல்கிறார்.

தன்னை ஒரு பெண் காதலிக்கிறார் என்ற ஆனந்தத்தில் அவரை பார்க்கச் சென்ற துருவா, நாயகியை பார்த்தவுடன் அதிர்ச்சியடைகிறார். 6 அடி உயரமுடைய தனக்கு குள்ளமான பெண்ணா என்று மனதில் நினைக்கும் துருவா வெண்பாவை தவிர்க்க நினைக்கிறார். ஆனால் நாயகி விடாப்பிடியாக துருவாவை துரத்தி காதலித்து வருவதால், ஒரு கட்டத்தில் துருவாவும், வெண்பாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில் வெண்பாவை ஒருதலையாக காதலித்து வரும் பள்ளி மாணவர் ஒருவர், துருவாவுடன் வெண்பா ஊர் சுற்றுவதாக வெண்பாவின் அப்பாவான சார்லியிடம் பற்ற வைக்கிறார். இதனால் சார்லி, வெண்பாவை அடித்து வீட்டிற்கு இழுத்து செல்கிறார். இதனால் ஏற்பட்ட மனவேதனை மற்றும் அவமானத்தால் மனம் நொந்து போகிறார் துருவா. ஆனால், வெண்பா எப்போதும் துருவாவையே நினைத்து உருகுகிறார்.

இறுதியில் கோமாவில் இருக்கும் துருவாவின் தாய் மீண்டு வந்தாரா? துருவா, வெண்பாவுடன் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வேலையில்லாமல் ஊர்சுற்றி வரும் இளைஞர்களுக்கு மத்தியில், வேலைக்கு சென்றுகொண்டே அம்மாவையும் பொறுப்புடன் பார்த்துக்கொள்ளும் பொறுப்புள்ள இளைஞனாக துருவா நடித்திருக்கிறார். தனது கருத்தில் உறுதியுடன் இருக்கும் துணிச்சலான பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். பள்ளி சீருடையில் மாணவி போல தோன்றினாலும், மற்ற உடைகளில் ஒரு நாயகிக்கு உண்டான தோற்றத்துடன் ரசிக்க வைக்கிறார்.

சார்லி அனுபவ நடிப்பால் அசர வைத்திருக்கிறார். மற்றபடி அபிராம் கிருஷ்ணா, ஜெய கணேஷ், வைஷாலி என மற்ற கதாபாத்திரங்களும் தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

10 மாதம் சுமந்து பெற்ற தாயை உயிருள்ள வரை காக்க வேண்டும் என்ற அம்மா பாசத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார் இயக்குநர்  துவாரகா ராஜா. உயரமான காதலன், குள்ளமான காதலி என்ற கான்செப்ட்டில் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. சிகரெட் பிடிப்பது தவறு என்று சொல்லிவிட்டு, சிகரெட் பிடிப்பது போன்று பெரும்பாலான காட்சிகள் இடம் பெற்றிருப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது.

சி.சரண் குமாரின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

`காதல் கசக்குதய்யா’ – கொஞ்சம் இனிப்பு, கொஞ்சம் கசப்பு!