“ஜெயலலிதா நீண்டநாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்”: அப்போலோ திடீர் அறிக்கை!

முதல்வர் ஜெயலலிதா நீண்டநாள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் குழு கூறியிருப்பதாக சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி சுப்பையா விசுவநாதன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள இரண்டு பக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது.

முதல்வருக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், செயற்கை சுவாசம் மற்றும் அதனுடன் இணைந்த இதர சிகிச்சைகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப்பிரிவு நிபுணர்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், சுவாச சிகிச்சை நிபுணர்கள், நோய்த் தொற்று சிகிச்சை சிறப்பு நிபுணர்கள், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் முதல்வர் இருந்து வருகிறார். இந்த குழுவினரால் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதிஷ் நாயக் ஆகியோர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவினர் அப்போலோ மருத்துவ நிபுணர் குழுவினருடன் இணைந்து முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.

எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் முதல்வரை பரிசோதித்ததுடன் தற்போது அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சைகளைத் தொடரவும் ஒப்புதல் அளித்தனர். இக்குழுவினர் அக்டோபர் 7-ம் தேதிவரை தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

கடந்த மாதம் 30-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவை பரிசோதித்த லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு ஜான்பீலே, அக்டோபர் 6-ம் தேதி சிகிச்சை குறித்து மீண்டும் ஆய்வு செய்தார்.

முதல்வருக்கு இருக்கும் சர்க்கரை நோய், குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சுக்குழல் அழற்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டும், மருத்துவர்களின் தொடர் ஆலோசனைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகள் அடிப்படையிலும், அப்போலோ மருத்துவ நிபுணர்கள் குழுவினர் விரிவான மருத்துவ சிகிச்சைத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். தற்போது முதல்வருக்கு செயற்கை சுவாசம், நுரையீரலில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றுக்கான மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், ஊட்டச்சத்துகள், பொது மருத்துவ சிகிச்சை மற்றும் இதர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

முதல்வருக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் தொடர்வதுடன், அவர் மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்பதே முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.