கொலைகார இந்துத்துவவாதி சடலம் மீது தேசியக்கொடி போர்த்தியதால் சர்ச்சை!

உத்தரப் பிரதேசம் தாத்ரி அருகே பிசாரா கிராமத்தை சேர்ந்தவர் முகமது (வயது 52). கடந்த 2015 செப்டம்பர் 28ஆம் தேதி இவர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி, ஒரு கும்பல் இவரை அடித்து படுகொலை செய்தது. இது தொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களில் ரவி சிசோடியா (21) என்பவர் உத்தரப் பிரதேசத்தின் காஸ்னா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 3ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 4ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சலால் அவர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறைக் காவலர்கள் அடித்து கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

“ரவி சிசோடியாவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தாத்ரி கொலை வழக்கில் சிறையில் உள்ள இதர 17 பேரையும் விடுவிக்க வேண்டும்” என்று கோரி விஸ்வஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

ரவி சிசோடியாவின் சடலம் தாத்ரி அருகேயுள்ள அவரது சொந்த கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது சடலம் மீது இந்துத்துவா அமைப்பினர் இந்திய தேசிய கொடியைப் போர்த்தியுள்ளனர். “எங்களைப் பொறுத்தவரை ரவி சிசோடியா ஒரு தியாகி. அவரது சடலம் மீது தேசியக் கொடி போர்த்துவதில் தவறில்லை” என்று அவர்கள் வாதிடுகின்றனர். இது சார்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மனிதாபிமானிகளை “தேசதுரோகி”களாகவும், சமூக விரோதிகளை “தேசாபிமானி”களாகவும் கருதும் ஆட்சியாளர்கள் உள்ள நாட்டில் இதுவும் நடக்கும்! இதற்கு மேலும் நடக்கும்!