அது மற்றொரு மரணம்… அவ்வளவுதான்…!

ஒருவருக்குப் பல அடையாளங்கள் இருக்கலாம். ஆனால், முகவரி ஒன்றாகத்தான் இருந்தாக வேண்டும். ஒருவர், பெண் என்ற அடையாளத்தில் அறியப்படலாம். ஆனால், அது அவரின் வர்க்கம் என்னவென்பதைக் காட்டாது.

பெண்களாகப் பிறந்த தலைவர்கள் எல்லாம் பெண் விடுதலைக்கான போராளிகள் கிடையாது. “அவள் கள்ள உறவு வைத்திருந்தாள், எனவே கொலை செய்யப்பட்டாள்” என்ற பொருள்பட சட்டமன்றத்தில் பேசியவர் பெண் உடல் கொண்டிருந்தாலும்…. நிச்சயமாக ஓர் ஆண்.

ஒருவர் கருணை உள்ளம் கொண்டவர் என்பதற்கான விவரங்கள் நிறைய இருக்கலாம். ஆனால், யாருக்கு எப்போது கருணை காட்டினார் என்ற விவரம் தெரிவிக்கப்படாது இருக்கலாம். அல்லது கேட்கப்படாமல் இருக்கலாம். அல்லது புரிந்துகொள்ளப்படாது இருக்கலாம்.

புரட்சி தலைவி/ தலைவர் என்று ஒருவரை அடையாளப்படுத்தலாம். ஆனால், யாருக்காக புரட்சி செய்தார் என்ற கேள்வி கேட்கப்படாமல் இருக்கலாம்.

ஒருவர் துணிச்சல்காரர் என்று அறியப்படலாம். ஆனால், அவரின் துணிச்சல் யாருக்கு எதிரானது என்ற கேள்வி கேட்கப்படவில்லை என்றால், அவரின் முகவரி தெரியாமலேயே போய்விடும்.

எந்த ஒரு மனிதரும் மரணமடைந்தவருக்கு மரியாதை செலுத்த வேண்டும்.

ஆனால், மரணமடைந்தவர்களுக்கு, கொலை செய்யப்பட்டோருக்கு மரியாதை செய்யாதவர், அல்லது கொலைகள் செய்ய துணையானவருக்கு, கொலையாளிகளைக் காப்பாற்றியவருக்கு, அவரின் மரணத்தின்போது மரியாதை செய்ய முடியுமா?

அதாவது, தனக்கு மக்கள் அளித்த அதிகாரத்தைப் பயன்படுத்தி கொலைகள் செய்தவருக்கு மரியாதை செய்ய முடியுமா, இறந்துவிட்டார் என்ற காரணத்துக்காக?

அல்லது ‘அப்பாடி, ஒழிந்தது ஒரு சாத்தான்’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டு, சாத்தான்கள் தோன்ற வாய்ப்பில்லாத சமூகத்தை உருவாக்க உழைக்க வேண்டுமா?

சில மரணங்கள் என் இதயத்தைத் தாக்குகின்றன. பரமக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட தலித்துகள் துவங்கி… தருமபுரியில் எரிக்கப்பட்ட மாணவிகள் உட்பட… அன்றாடம் பசியில் சாகும் கிராமப்புற ஏழைகள் வரை… கூடங்குளத்தில் தாக்கப்பட்ட சகோதரிகள் முதல், பொய்கைகரைப்பட்டியில் கருப்பையை இழந்த பெண்கள் வரை, சுமங்கலித் திட்டத்தில் வாழ்வை இழந்த பெண்கள் உட்பட, தலித்துகளின் கிணற்றில் விஷத்தைக் கலந்தது முதல், “நான் ஒரு பாப்பாத்தி” என்று திமிர் காட்டியது வரை…. ஏர் கூலர்கள் மத்தியில் அமர்ந்துகொண்டு பேசிய பெண்மணியின் கூட்டத்தில் வெய்யிலால் செத்துப்போன ஏழைப் பெண்கள்… என்று என் பட்டியல் நீள்கிறது.

எனக்கு பெண் என்ற அல்லது வேறு எந்த அடையாளமும் பொருட்டல்ல. மாறாக, வர்க்கம் என்ற முகவரி மிக முக்கியமானது. ஜெ என்ற பெண்ணால், அவரின் ‘கருணை‘ உள்ளத்தால், ‘துணிச்சலா’ல், ‘சாதனை‘களால் செத்தது எம்மக்கள்.

நான் எம்மக்களுக்கு நேர்மையாக இருக்க விரும்புகிறேன். ஏனென்றால், அவர்கள்தான் வரலாற்றை இயக்கி முன் செல்பவர்கள்.

நேற்றைய மரணத்தில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

அது மற்றொரு மரணம். அவ்வளவுதான்.

MATHI VANAN

Madurai District Secretary

CPI ML (Libaration)

 

 

 

Read previous post:
0a1a
“யாருக்கும் அஞ்ச மாட்டார் சோ”: ரஜினிகாந்த் புகழஞ்சலி!

நடிகரும் ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியருமான 'சோ' ராமசாமி இன்று (புதன்கிழமை) அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சோவின் இல்லத்தில்

Close