“யாருக்கும் அஞ்ச மாட்டார் சோ”: ரஜினிகாந்த் புகழஞ்சலி!

நடிகரும் ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியருமான ‘சோ’ ராமசாமி இன்று (புதன்கிழமை) அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சோவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. சோவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சோவின் நீண்டகால நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த், சோவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

0a1e

பின்னர் ரஜினி செய்தியளர்களிடம் கூறுகையில், ”1978-ல் இருந்து சோவை எனக்கு நன்றாகத் தெரியும். நான் சென்னையில் இருந்தால் வாரத்துக்கு ஒரு முறையாவது சோவைச் சந்திப்பேன். நிறைய பேசுவோம்.

பத்திரிகை உலகின் ஜாம்பவான் சோ. அவர் பொய் சொல்லி நான் கேள்விப்பட்டதும் இல்லை. பார்த்ததும் இல்லை. சோ யாருக்காகவும் பயந்தோ அல்லது தாட்சண்யத்துக்காகவோ பேசவும் மாட்டார். அஞ்சவும் மாட்டார்.

சோவின் நட்பு வட்டம் தமிழகத்தில் மட்டுமல்ல, டெல்லி வரைக்கும் பரந்து கிடந்தது. மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், மோடி என பெரிய நட்புறவைக் கொண்டவர். சோவின் பேச்சுக்கும், சிந்தனைக்கும் மிகப் பெரிய மரியாதை உள்ளது.

சோ மிகப் பெரிய மனிதர். அவரது இழப்பு சாதாரணமானதல்ல. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்றார் ரஜினி.