“சபாநாயகர் தனபாலுக்கு ஒரு அருந்ததியனாக என் கண்டனங்கள்!”

“நான் சார்ந்துள்ள அருந்ததிய சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக பேரவையில் திமுகவினர் நடந்து கொண்டனர்” – சபாநாயகர் தனபால்.

தனபால் அவர்களுக்கு கடைசியாக, தான் ஒரு அருந்ததியர் என்பது நினைவுக்கு வந்துவிட்டது. அருந்ததியர்களின் “நலம் விரும்பி”களான எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் கண்ணீருடன் கை தட்ட, தாம் அருந்ததியர் என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

உங்கள் கட்சியையும் ஆட்சியையும் கடைசியில் சக்கிலியர் மீதான அவதூறை சொல்லித் தான் காப்பாற்ற வேண்டுமா?

இவ்வளவு நாள் அருந்ததியருக்கான நலன்களை முன்னிறுத்தி தான் உங்கள் ஆட்சி நடந்தது என்பதை, எடப்பாடியின் வீட்டுக்கு எதிரில் குடியிருக்கும் போலீஸ் வேலையிலிருக்கும் அருந்ததியரின் புலம்பல், தமிழக வீதிகளில் அநாதையாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

“என்னைப் பார்க்க கட்சிக்காரர்கள் வரலாம். அருந்ததியர் என்ற என் சாதிக்காரர் யாரும் வரக் கூடாது” எனச் சொன்ன தனபாலுக்கு இந்நேரம் எங்கள் சாதி தேவைப்படுகிறதோ?

சாதிவெறிக் கவுண்டர்களுக்கு எப்போதும் போல எம்மக்களை காட்டிக்கொடுக்கப் போகும் தங்களுக்கு ஒரு அருந்ததியனாக என் கண்டனங்கள்.

எழுபத்தேழாம் ஆண்டிலிருந்து ரெண்டாயிரத்து ஏழு வரையான நாற்பது ஆண்டுகளில் ஐந்து முறை சமஉவாகவும் ஒருமுறை மந்திரியாகவும் இருந்த காலங்களில் இந்த பாவப்பட்ட சாதிக்குத் தாங்கள் என்ன கிழித்தீர்கள் என்பதைச் சொல்ல முடியுமா?

உங்கள் பிரச்சனையை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். எங்கள் சாதி என்ன உங்களுக்கு ஊறுகாயா?

MANI MATHIVANNAN