ஈஷா முகத்தில் கரி பூசியது நீதிமன்றம்: சமூக ஆர்வலர் சிவா ஜாமீனில் விடுதலை!

ஈஷாவின் தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சமூக ஆர்வலர் சிவாவிற்கு ஜாமீன் வழங்கி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக ஈஷாவின் பக்தர் என்கிற பெயரில், சிவாவிற்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை, வழக்கிற்கு சம்பந்தமே இல்லாமல் தாக்கல் செய்வதாக கண்டித்த நீதிபதி அம்மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. வனத்துறை அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியது, பள்ளி கல்வித்துறையின் நிபந்தனைகளை அமலாக்காமல் பள்ளியை நடத்துவது என பல்வேறு  முறைகேடுகள் ஈஷா மையத்தின் மீது தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

மேலும், பெற்றோர்களின் அனுமதியில்லாமல் மூளைச்சலவை செய்து பிள்ளைகளை சன்னியாசம் மேற்கொள்ள வைக்கிறார்கள் என்று முன்னாள் பேராசிரியர் முதற்கொண்டு தொடர்ந்து இம்மையத்தின் மீது புகார்கள் எழுந்து வந்தது.

இதற்கிடையில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 44 ஏக்கர் நிலத்தை இம்மையத்தினர் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பழங்குடியின மக்களுக்கு பிரித்தளிக்க வேண்டிய நிலத்தை கார்ப்பரேட் சாமியார் அபகரிக்கும் முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் தற்போது எதிர்ப்பு கிளம்பிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இது போன்ற முறைகேடுகளை அரசின் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிக்கொணரும் நடவடிக்கையில் சமூக ஆர்வலர் சிவா ஈடுபட்டிருந்தார்.

இதனால் எரிச்சலின் உச்சத்திற்கு சென்றவர்கள், ஈஷா மையத்தில் பணியாற்றிய மகேஷ்வரி என்ற பழங்குடியின பெண் ஒருவரை, பட்டா வாங்கித் தருவதாக சிவா மோசடி செய்ததாக பொய்யான புகாரை அளிக்க வைத்தனர்.

இதனையடுத்து சமூக ஆர்வலர் சிவாவை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஆலாந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிவா மீதான ஜாமீன் மனு செவ்வாயன்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சிவா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபுபக்கர், ஈஷாவின் தூண்டுதல் பேரில்தான் இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்டதாகவும், சமூக ஆர்வலர் சிவாவிற்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும், மேற்கு தொடர்ச்சி மலையில் நடைபெறும் முறைகேடுகள்  குறித்து திரட்டிய ஆதாராங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் சிவா திரட்டிய ஆதாரங்கள் ஆகிய சுமார் 400 பக்க ஆவணங்களை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதனிடையே, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்கிற வழக்கிற்கேற்ப, ஈஷா மையத்தின் பக்தர் என்ற பெயரில் வடவள்ளியை சேர்ந்த ஸ்யாம் சுந்தர் என்பவர், ஈஷாவிற்கு தொடர்ந்து இடையூறை ஏற்படுத்தும் சிவாவிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபனை மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி, வழக்கிற்கு சம்பந்தமே இல்லாமல் ஈஷா மையம் எப்படி இங்கே வருகிறது என்று கண்டித்து, அம்மனுவை நிராகரித்தார். மேலும், சிவா மீதான புகார் மனுவில், பத்து நாட்களுக்கு முன்பு பணம் கேட்டார் என்று ஓரிடத்திலும், முப்பது நாட்களுக்கு முன்பு பணம் கொடுத்தார் என்று இன்னொரு இடத்திலும் பதிவாகியுள்ளது. பத்து நாட்களுக்கு முன்பு கேட்ட பணத்தை முப்பது நாட்களுக்கு முன்பு எப்படி கொடுத்திருக்க முடியும் என்று வினா எழுப்பினார்.

மேலும், சாதியின் பெயரை சொல்லி திட்டியதாக வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த இடத்திலும் என்ன வார்த்தையை பயன்படுத்தி திட்டினார் என்பது புகாரில் பதிவு செய்யப்படவில்லை விசாரணை அதிகாரிக்குத்தான் அது குறித்து தெரியும் என்றார்.

ஆகவே, மேற்கொண்ட காரணங்களை முன்வைத்து சிவாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும்வரை ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் ஆஜராகி தினமும் காலை கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Courtesy: theekkathir.in