கணக்கு காட்டாத டெபாசிட்டுக்கு 50% வரி: பணம் எடுக்க 4 ஆண்டுகளுக்கு தடை!

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாக வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு உரிய கணக்கு காட்டாவிட்டால் அதற்கு குறைந்தபட்சம் 50 சதவீத வரி விதிக்கப்படும். இது தவிர மீதியுள்ள பணத்தில் பாதியை 4 ஆண்டுகளுக்கு வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரைவில் வருமான வரிச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட இருக்கிறது.

டெல்லியில் வியாழக்கிழமை இரவு, நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டிசம்பர் 30-க்குள் கருப்புப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யாமல், வேறு வழிகளில் பதுக்குபவர்களுக்கு நிச்சயமாக அதிகபட்சம் 90 சதவீதம் வரி, அபராதம் விதிக்கப்படும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் தேதி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை நரேந்திர மோடி வெளியிட்டார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளை (ரூ.2000 வரை) பெற்றுக்கொள்ளலாம் என்றும், வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த இருவாரங்களாக பொதுமக்கள் வங்கி வாயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய நோட்டுகளை மாற்றிக்கொள்ள படாதபாடு பட்டனர். இதற்கான காலக்கெடு வியாழக்கிழமையுடன் (நவம்பர் 24) முடிந்தது. எனினும், பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.

டிசம்பர் 30ஆம் தேதி வரை பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு உரிய கணக்கு காட்டாவிட்டால் குறைந்தபட்சம் 50 சதவீத வரி விதிப்பது என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த வரி வசூலிக்கப்பட்ட பிறகு மீதியுள்ள பணத்தில் பாதியை 4 ஆண்டுகளுக்கு வங்கிகளில் இருந்து எடுக்க முடியாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே வருமான வரிச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வரப்பட இருக்கிறது.

முன்னதாக, கருப்புப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு 10 சதவீதப் பணம் மட்டுமே திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும், மீதியுள்ள பணத்தை வரியாகவும், அபராதமாகவும் வருமான வரித்துறை வசூலித்து விடும் என்றும் தகவல் வெளியானது. ஆனால், இப்போது அது போன்ற நடவடிக்கை இருக்காது என்று தெரிகிறது. மாறாக, அதைவிட கடுமையாக மேற்சொன்ன முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

நவம்பர் 8-க்குப் பிறகு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு கணக்குக்கேட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று வருமான வரித்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது நினைவு கூரத்தக்கது