தன் மரணத்தை முன்னறிவித்த புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோ இயற்கை எய்தினார்!

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ இயற்கை எய்தினார். அவருக்கு வயது 90. உடல்நலம் குன்றியிருந்த பிடல், வெள்ளிக்கிழமை (நவ.25) இரவு 7 மணிக்கு இயற்கை எய்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1926ஆம் ஆண்டு பிறந்த பிடல், கியூப சர்வாதிகாரி பாடிஸ்டாவை எதிர்த்து புரட்சி செய்து, வென்று, மக்கள் ஆதரவுடன் 1959ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றார். தொடர்ந்து 49 வருடங்கள் கியூபா அரசில் தலைமை பதவிகளை வகித்த பிடல், 2008ஆம் ஆண்டு முதுமை காரணமாக பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பிடலின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ தற்போது க்யூபாவின் அதிபராக இருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பிடல் உரையாற்றுகையில், “எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். கொஞ்ச நாட்களில் எல்லாரையும் போல் நானும் இறந்து போவேன். அதே நேரத்தில், உத்வேகத்துடனும் சுயமரியாதையுடனும் உழைத்தால் மனித குலத்துக்கு தேவையான பொருளாதார மற்றும் கலாசார நன்மைகளை உருவாக்க முடியும் என்பதற்கு இவ்வுலகில் க்யூப கம்யூனிஸ்டுகள் சான்றாக இருப்பார்கள். அந்த நன்மைகளுக்காக சோர்வின்றி தொடர்ந்து கம்யூனிஸ்டுகளாகிய நாம் உழைத்திட வேண்டும்” என்றார்.

மார்க்ஸிய கொள்கைப் பிடிப்பு கொண்ட பிடல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு முகமாக உலகம் எங்கும் திகழ்பவர். தன் வாழ்நாள் முழுக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பணி ஆற்றியவர். அவரை கொல்வதற்கு அமெரிக்க உளவு நிறுவனம் 638 தடவை முயன்று தோற்று போனது குறிப்பிடத்தக்கது.