ஆடை கட்டுப்பாடு உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு!

அறநிலையத் துறை கோயில்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த கோயில் ஒன்றில் கிராமிய கலைநிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி தாக்கலான மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் பக்தர்களுக்கு ஜன.1 முதல் ஆடை கட்டுப்பாடு விதித்து 26.11.2015-ல் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து அனைத்து கோயில்களிலும் ஆகமவிதிகளை பின்பற்றுமாறு செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஜனவரி முதல் நாளான நேற்று பாரம்பரிய உடை அணிந்து வந்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஆடை கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறநிலையத் துறை செயலர் சார்பில் திடீரென மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், தமிழ்நாடு கோயில் நுழைவு அனுமதிச் சட்டத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்னென்ன உடை அணிந்து வர வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும், தனிப்பட்ட கோயில்களில் அவர்களின் பாரம்பரிய உடைகளை அணிய உத்தரவிடலாம் என்றும் அந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

பக்தர்கள் பாரம்பரிய உடை அணிவது தொடர்பாக ஏற்கெனவே சட்டம் உள்ளபோது, தனி நீதிபதி ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தனியாக உத்தரவு பிறப்பித்தது தேவையற்றது. திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் மேலாடை அணியக்கூடாது. ஆனால் தனி நீதிபதி உத்தரவில் மேலாடையுடன் வேஷ்டி அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சட்டத்தில் கூறியிருப்பதும், தனி நீதிபதியின் உத்தரவும் முரணாக உள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.

Read previous post:
parthiban 2-1-15
சென்னை வெள்ளம் பற்றிய ‘பீப்’ பாடல்: பார்த்திபன் வெளியிட்டார்!

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு சென்னை மீண்டுவரும் நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இது பற்றிய ‘பீப்’ பாடல் ஒன்றை யூடியூபில் வெளியிட்டுள்ளார். சென்னையில் வெள்ள பாதிப்பு

Close