சென்னை வெள்ளம் பற்றிய ‘பீப்’ பாடல்: பார்த்திபன் வெளியிட்டார்!

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு சென்னை மீண்டுவரும் நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இது பற்றிய ‘பீப்’ பாடல் ஒன்றை யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பார்த்திபன் நிவாரண உதவிகளை வழங்கினார். தற்போது சென்னை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் பார்த்திபன், ‘த்துதா மிகித லகுதா’ என்ற பீப் பாடல் ஒன்றை எழுதி யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

இப்பாடல் குறித்து பார்த்திபன் கூறுகையில், “ஒரு சராசரி மனிதனாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். ஒரு வீட்டில் துக்கம் நடந்தால்கூட, அத்துக்கத்தை மறக்க சில நாட்களில் ஏதாவது நல்ல காரியம் ஒன்றை நடத்துவார்கள். அதேபோல் சென்னையும் மீண்டும் பழைய நிலைமைக்கு வரலாமே என்று ஒரு பாடல் பண்ணலாம் என தோன்றியது. அப்பாடலை நான் எழுத சத்யா இசையமைத்தார். தற்போது ‘பீப்’ பாடல் தமிழகத்தில் பரபரப்பாக இருப்பதால் இப்பாடலை ‘பீ பீ’ என்று தொடங்குவது போல எழுதினேன்.

இப்பாடலில் வெள்ள பாதிப்பின்போது உதவிய தன்னார்வலர்களைத்தான் ஆட வைத்தேன். அவர்களோடு சமுத்திரக்கனி, மயில்சாமி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். துயரப்பருப்பு, கவலைப்பருப்பு என பருப்பில் புதிய வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். மக்களிடையே இருக்கும் மனிதநேயத்தை வெளியே காட்ட வேண்டும் என்பது தான் இப்பாடலின் நோக்கமாகும்.

இப்பாடலை புத்தாண்டு தினத்தன்று வெளியிடலாம் என்று முடிவு செய்து ‘Me & Youtube’ என்ற பெயரில் யு-டியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் பதிவேற்றி இருக்கிறேன். இதே போன்ற பல விஷயங்களை அந்த சேனலில் தொடர்ச்சியாக பதிவேற்ற முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.