சிம்புவுக்கு உதவிக்கரம் நீட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்!

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் டீஸர் புத்தாண்டுக்கு வெளியானால் நன்றாக இருக்கும் என்று பேசி வெளியிட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

சிம்பு, மஞ்சிமா மோகன், பாபா சேகல் உள்ளிட்ட பலர் நடிக்க கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை கெளதம் மேனன் தயாரித்திருக்கிறார். ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் முதல் டீஸர் வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இப்படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் உள்ளிட்ட எதுவுமே வெளியிடப்படவில்லை. படப்பிடிப்பை முடிப்பதில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு.

இந்நிலையில், கெளதம் மேனனும் ரஹ்மானும் ‘சிம்புவுக்கு பெரும் சர்ச்சை உருவாகி இருக்கிறது. இந்த நேரத்தில் அந்தப் பையனுக்கு நாம் ஏதாவது பண்ண வேண்டும்’ என்று பேசியிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், அப்படத்துக்கு கொடுக்க வேண்டிய இறுதிப் பாடலை முடித்துக் கொடுத்திருக்கிறார்.

தெரிந்தோ தெரியாமலோ சிம்பு ‘பீப்’ இசை சர்ச்சையில் சிக்கிவிட்டார். அந்தப் பாடல் உருவாக்கத்தில் உள்ள தர்க்க ரீதியிலான சரியா தவறா விவாதங்களைத் தாண்டி, அவரால் அதிகாரபூர்வமாக அப்பாடல் வெளியிடப்படாமல் சிக்கல் ஏற்பட்டது. நம்முடன் பணிபுரியும் ஓர் இளம் கலைஞனுக்கு சமூகத்தில் தெரிந்தோ தெரியாமலோ மதிப்பில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இந்த நேரத்தில், அவர் குறித்த பார்வை மாற வேண்டும். அதற்கு, இப்போது டீஸர் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று ரஹ்மான்தான் எடுத்துச் சொன்னதாக தகவல்.

அத்துடன், “படத்தின் டீசரை உடனே முடித்துக் கொடுங்கள், நான் பின்னணி இசையை முடித்துக் கொடுத்து விடுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அதன்படி, தான் ஏற்கெனவே திட்டமிட்ட பணிகளை சற்றே தள்ளிவைத்துவிட்டு, டீசருக்கான இசைப் பணியை முடித்துத் தந்திருக்கிறார்.

இருவருமே உடனடியாக டீசருக்கான வேலைகளை முடித்து அதை வெளியிட்டு இருக்கிறார்கள். இதேபோல், படத்தின் முழு வேலைகளையும் முடித்து விரைவில் படத்தை வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருவரும் இறங்கி இருக்கிறார்கள்.

பொதுவாக, ரஹ்மான் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பட டீஸர்களை ஷேர் செய்வது அரிது. ஆனால், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் டீஸர் வெளியானவுடன் முதலில் பகிர்ந்தவர் அவரே என்பது கவனிக்கத்தக்கது.