”வலிகளுடன் வாழ பழகிக் கொண்டேன்”: ‘ரத்தம்’ படநிகழ்வில் இளைய மகளுடன் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி உருக்கம்

‘தமிழ்ப்படம்’, ‘தமிழ்ப்படம் 2’ ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் சி.எஸ்.அமுதன், தற்போது ‘ரத்தம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அரசியல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தை  இன்ஃபினிடி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லலிதா தனஞ்செயன், பிரதீப், கமல் போரா, விக்ரம் குமார், பங்கஜ் போரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற அக்டோபர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

‘ரத்தம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு செப்.29ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவுடன் கலந்துகொண்டார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அவரது மூத்த மகள் மீரா தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த துயரத்தில் இருந்து விஜய் ஆண்டனி விரைவில் மீண்டு சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் பிராத்தனையாக இருந்தது. தற்போது அந்த துயரத்தில் இருந்து சற்று விடுபட்டு அவர் மீண்டும் பட நிகழ்வில் கலந்துகொண்டது அவரின் ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

0a1d

’ரத்தம்’ பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி பேசியதாவது:

இயக்குனர் அமுதன் என் நண்பர். அவருடைய அப்பா எனக்கு மியூசிக் சொல்லிக் கொடுக்க ரொம்ப கஷ்டப்பட்டார். நான் மியூசிக் கற்றுக் கொள்ளாமலே மியூசிக் பண்ணினேன் என்பது அவருக்கு தெரியும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் எனக்கு உதவிகள் செய்தார். ரொம்ப நாட்களாக அமுதன் கூட இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அது இப்போது கைகூடி இருக்கிறது.

அவரை ஒரு காமெடி பட இயக்குநராகத் தான் உங்களுக்குத் தெரியும். அதைத் தாண்டி அவருடைய வேறொரு பரிமாணம் இப்படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. நிச்சயம் இப்படம் வெற்றிப் படமாக அமையும். படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். கூடிய சீக்கிரமே இன்னொரு படம் பண்ணுவோம் அமுதன்” என்று பேசினார்.

இதையடுத்து பேசிய இயக்குநர் சி.எஸ்.அமுதன், “என்னால் சீரியஸா படம் பண்ண முடியுமா என்கிற கேள்வி என் மீது எப்போதும் இருக்கும். அதற்கான முயற்சி தான் இந்த ‘ரத்தம்’ படம். எங்க அப்பா இறந்தபோது, சினிமா துறையிலிருந்து எங்க வீட்டிற்கு வந்தவர் விஜய் ஆண்டனிதான். அப்போது அவர் என்னிடம் ‘நாங்கள் எப்போதும் உன்னுடன் இருப்போம்’ என்றார். அன்று அவர் எனக்குச் சொன்னதைத் தான் இன்று நான் அவருக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். ‘நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் சார்” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

இதன்பின் நேர்காணல் கொடுத்த விஜய் ஆண்டனி, ”வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. என் வாழ்வில் நிறைய இழப்புகளை அனுபவித்துவிட்டேன். இப்போது வலிகளுடன் வாழ பழகிக்கொண்டேன். நான் பெரிய தத்துவவாதி இல்லை. ஆனால், இழப்புகள் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன்” என்று உருக்கமாக கூறினார்.