“விமான பணிப்பெண்கள் என்னை வினோதமாக பார்த்தார்கள்!” – ஹாரிஸ் ஜெயராஜ்

விக்ரம் முதன்முதலாக இரு வேடங்களில் நடித்துள்ள படம் ‘இருமுகன்’. தமீன் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில், ஆரோ சினிமாஸ் வெளியீட்டில் திரைக்கு வந்திருக்கும் இப்படம், அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசும்போது, “முதலில் இயக்குநர் பெயரைச் சொன்னதும் பாதி சம்மதம். பிறகு நடிப்பவர் விக்ரம் என்றதும், முழு சம்மதம் சொன்னேன். இதில் அவரைத் தவிர யாரும் செய்ய முடியாது. கதை சொல்லும்போதே, படப்பிடிப்பு இல்லாமலேயே லவ் பாத்திரத்தில்  விக்ரமை பொருத்தி மனக்கண்ணில் படம் பார்த்தேன். படத்தில் எல்லாருமே சிக்சர் அடிப்பார்கள் என்று தெரிந்தது.

படம் ஆரம்பிக்கும் போது சிபு சிரமப்பட்டார். நான் ஊக்கம் கொடுத்தேன். பைபிளில் சம்பூர்ணம் என்றொரு வார்த்தை வரும். அப்படி எல்லாமே முழுமையாக நல்லபடியாக முடிந்தது. படம் பேசி இரண்டாவது நாளே ஜெர்மனி போனேன். புறப்பட்ட சமயத்தில் சிபு டீஸர் வேண்டும் என்றார். அதைத் தந்தால் அது படத்துக்கு உதவும் என்றார். பாட்டே ஆரம்பிக்கவில்லை;  அதற்குள் டீஸரா?  பயந்தே விட்டேன். ஆனாலும் என்ன செய்வது?  ஒரு கீபோர்டும் லேப் டாப்பும்  எடுத்துக்கொண்டு போனேன். விமானப் பயணம் பத்தரை மணி நேரம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் தூங்கவேயில்லை. ஜெர்மனி போவதற்குள் டீஸர் தயார். விமானத்தில்   என்னை ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் வினோதமாகப் பார்த்தார்கள். சந்தேகமாகப் பார்த்தார்கள். கடைசியில் அவர்களிடமே டீஸரைப் போட்டுக் காட்டினேன்.

எனக்கு ‘அந்நியன்’ ,’கஜினி’ க்குப் பிறகு சவாலான படம் ‘இருமுகன்’. விக்ரமின் இரண்டு பாத்திரங்களுக்கும் தனித்தனியாக இசையமைத்தேன். ”என்றார்.

முன்னதாக அனைவரையும் வரவேற்றுப் பேசிய தயாரிப்பாளர் சிபு தமீன், ”விக்ரம் சார் தயாரிப்பாளர்களின் நடிகர். ஆனந்த் சங்கர் தயாரிப்பாளர்களின்  இயக்குநர். சொன்ன பட்ஜெட்டில் சொன்ன தேதியில் முடித்தார். நயன்தாரா அக்கறையுடன் நடித்து ஒத்துழைத்தார்” என்றார்.

விநியோகஸ்தர் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் பேசும்போது, “நாங்கள்  தமிழ், இந்தி என 18 படங்கள் இதுவரை விநியோகம் செய்து இருக்கிறோம். ‘கபாலி’ ,’தெறி’ க்குப் பிறகு நல்ல தொடக்கமும் வசூலும் பெற்றுள்ள படம் ‘இருமுகன்’ தான்.

தமிழ்நாட்டில் 450 தியேட்டர்களில் திரையிட்டோம். சென்னையில் மட்டும் 150 திரைகள். முதல் வாரத்திற்குள் 4.5 கோடி வசூலானது. தமிழ்நாடு மட்டும் 29. 25 கோடி வசூலானது.  25 வரைதான் எதிர்பார்த்தோம். அக்டோபர் 6 க்குள் 50 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.