இலை – விமர்சனம்

பெண்களை படிக்க வைக்க விரும்பாத ஒரு கிராமத்தில் வாழ்ந்துவரும் நாயகி சுவாதி நாராயணன், நன்றாக படித்து சமூகத்தில் சாதிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். இதற்கு அவரது அப்பாவும் ஆதரவு கொடுத்து வருகிறார். ஆனால், அவரது அம்மாவுக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை. அதேநேரத்தில் தனது தம்பியான நாயகிக்கு அவளை திருமணம் செய்து வைத்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.

சுவாதி படிக்கும் அதே பள்ளியில் படிக்கும் பணக்கார பெண்ணான இன்னொரு மாணவியின் அப்பா, தனது மகள் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பதற்காக சுவாதியை தேர்வுக்கு வரவிடாமல் தடுக்க பல சதி வேலைகள் செய்கிறார். மறுபுறத்தில் சுவாதி பெரிய படிப்பு படித்துவிட்டால் தனக்கு கிடைக்காமல் போய்விடுவாரோ என்ற எண்ணத்தில் அவருடைய படிப்புக்கு தடை போடும் வகையில் பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்.

இதையெல்லாம் தாண்டி சுவாதி தேர்வு எழுதினாரா? அவரது படிப்பு என்ன நிலைமைக்கு சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.

இலை என்ற கதாபாத்திரத்தில் வரும் நாயகி சுவாதி நாராயணன் முழு படத்தையும் தனது தோளில் சுமந்து தாங்கி சென்றிருக்கிறார். படிப்புக்காக போராடும் மாணவியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். தனது படிப்புக்கு ஆதரவாக இருக்கும் அப்பா உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் இருக்க, அவரது ஆசையை நிறைவேற்ற தேர்வு எழுத செல்லும் சுவாதிக்கு ஏற்படும் தடங்கல்களை எதிர்கொள்ளும் காட்சிகளில் எல்லாம் பரிதாபப்பட வைக்கிறார்.

நாயகியின் முறைமாமனாக வரும் ஜெனிஷ், கன்னட நடிகர் கிங் மோகன், மலையாள நடிகை ஸ்ரீதேவி, கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம், காவ்யா என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சரியான தேர்வு. அவர்களும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

இன்றைய காலசூழ்நிலையில் நகரத்தில் வாழும் மாணவர்களுக்கு படிப்பதற்கு நிறைய வசதிகள் இருந்தும் அவர்கள் கல்வியை பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், கிராமங்களில் கல்வி கற்பதற்கு வசதியில்லாமல் இருக்கும் குழந்தைகள் கல்விக்காக எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் இயக்குனர் அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறலாம்.

குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு சொல்ல வந்த கருத்தை இயக்குனர் பீனிஸ் ராஜ் அழகாக சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு தடையும் தாண்டி நாயகி தேர்வு எழுதுவாரா? என்று படம் முழுவதும் பரபரப்பு பயணிக்கிறது. இருப்பினும், நாயகியை படம் முழுக்க ஓடவிட்டு படமாக்கியிருக்கிறார். அதுவும் அந்த காட்சிகளின் நீளம் பார்ப்பவர்களுக்கு சற்று பொறுமையை சோதிக்கிறது. மற்றபடி, இயக்குனரின் இந்த புதிய முயற்சியை பாராட்டலாம்.

சந்தோஷ் அஞ்சலி ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது. படத்தில் விஷுவல் எபெக்ட்ஸ் அதிகம் இடம்பெற்றிருக்கிறது. இருப்பினும், அது தெரியாமல் ரொம்பவும் எதார்த்தமாக இருப்பதுபோல் தெரிகிறது. விஷ்ணு வி.திவாகரனின் இசை கதைக்கேற்ற உணர்வை கொடுத்திருக்கிறது.

‘இலை’ –  பசுமை!