கமலுக்கு நெருக்கமான நிதி நிறுவனத்தில் மோடி அரசின் வருமான வரித்துறை திடீர் சோதனை!

நடிகர் கமல்ஹாசனுக்கு நெருக்கமான பிரபல ‘கோகுலம் சிட் பண்ட்’ எனப்படும் தனியார் நிதி நிறுவனம் உட்பட சென்னையில் 25 இடங்களில் நரேந்திர மோடி அரசின் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை உட்பட இந்தியா முழுவதும் 80க்கு மேற்பட்ட இடங்களில் இன்று வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை கோடம்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் கோகுலம் நிதி நிறுவனத்தின் தலைவர் கோபாலன், ‘பழஸிராஜா’ உள்ளிட்ட சில மலையாள திரைப்படங்களையும், கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படத்தையும் தயாரித்துள்ளார்.

இவர் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வேலப்பன் சாவடியில், ‘ஜி ஸ்டூடியோ’ என்ற பிரமாண்டமான சினிமா ஸ்டூடியோ தொடங்கியுள்ளார். சமீபத்தில் இந்த சினிமா ஸ்டூடியோவை பல திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழாவில் பேசிய ‘ஜி ஸ்டூடியோ’வின் நிர்வாக இயக்குனர் பிரவீன், “இந்த ஸ்டூடியோவை துவங்கும் திட்டத்தை எங்களுக்கு அளித்தவர் கமல்ஹாசன் தான். பல ஹாலிவுட் ஸ்டூடியோக்களை நாங்கள் நேரில் போய் பார்த்து, அவற்றுக்கு இணையாக இந்த ‘ஜி ஸ்டூடியோ’வை பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறோம்” என்றார் பெருமையாக.

0

கமல்ஹாசனுக்கு இத்தனை நெருக்கமான கோகுலம் நிதி நிறுவனத்தின் கோடம்பாக்கம் தலைமையகத்தில் இன்று காலை முதல் மோடி அரசின் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

“வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக துப்பு கிடைத்ததை அடுத்து கோகுலம் நிதி நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகிறோம். மற்றபடி இதில் அரசியல் எதுவும் இல்லை” என்கிறது வருமான வரித்துறை வட்டாரம்.

மோடி ஆட்சியில், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ போன்ற ஏஜென்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று நாமும் அப்பாவித்தனமாய் நம்புவோமாக!

“வருமான வரி ஒழுங்காக கட்டுபவன் நான்” என்று அடிக்கடி பீற்றி, தன்னைத் தானே மெச்சிக்கொள்ளும் கமல்ஹாசனுக்கு ஒரு கேள்வி: “உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் ஹாலிவுட்டுக்கு இணையாக சினிமா ஸ்டூடியோ கட்டச் சொன்ன நீங்கள், ‘வருமான வரியையும் ஒழுங்காக கட்டுங்கள்’ என்று சொல்லாதது ஏனோ…?”