2 அணிகளை இணைக்கும் முயற்சியில் 3 அணிகளாக உடைந்தது அ.தி.மு.க.!

 அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர். சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி, ஆட்சியை காப்பாற்றுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு போன்ற விஷயங்களால் அதிமுக சசிகலா அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கட்சி, இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஓபிஎஸ் கூறும்போது, ‘‘இரு அணிகளும் இணைவது தொடர்பாக என்னை அணுகினால் பேச தயாராக உள்ளேன். நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது’’ என தெரிவித்தார். ஓபிஎஸ்ஸின் இந்தக் கருத்தை அமைச்சர்கள் பலரும் வரவேற்றனர். பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் எனவும் அறிவித்தனர்.

இதற்கிடையே, பெரியகுளத்தில் நேற்று காலை நிருபர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ‘‘சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருக்கும் வரை இரு அணிகள் இணைப்பு குறித்து பேச முடியாது’’ என திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால், இணைப்பு முயற்சியில் சிக்கல் ஏற்பட்டது.

ஒரு பக்கம் அமைச்சர்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். இன்னொரு பக்கம் டிடிவி தினகரனும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தினகரனை சந்தித்து பேசிய வெற்றி வேல் எம்எல்ஏ, ‘‘கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் இல்லாமல் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியது தவறு. அவர்களுக்கு அந்த அனுமதியை யார் கொடுத்தது?’’ என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரின் பேச்சு தொடர்பாகவும், அடுத்த கட்டமாக இரு அணிகளையும் ஒருங்கிணைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மாலை 6 மணிக்கு தொடங்கி 8.20க்கு கூட்டம் நிறைவு பெற்றது. அதன்பின், தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்ட அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்றனர். அவருடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:

ஜெயலலிதாவின் ஆட்சியை அடுத்த 4 ஆண்டுகள் மட்டுமல்ல, ஆண்டாண்டு காலமும் தமிழகத்தில் தொடர்வதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் அனைவருமே கலந்துகொண்டு ஒருமித்த கருத்தை எட்டியிருக்கிறோம்.

கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இன்றி, டிடிவி தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி விட்டு வழிநடத்த வேண்டும் என்பதே அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள், தமிழக மக்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது. அதன்படி, டிடிவி தினகரன் சார்ந்த குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கிவிட்டு, கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்துவது என்று ஆலோசித்து முடிவெடுத்திருக்கிறோம். அதிமுக தொண்டர்கள், பொது மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முதல்வர் உட்பட அனைவரும் இணைந்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

இந்த இயக்கத்தை வழி நடத்த, ஒரு குழு அமைக்கப்படும். அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறியிருந்தார். நாங்களும் தயார் என தெரிவித்திருந்தோம். நாளையே வந்தாலும் வரவேற்போம். நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டு கட்சியை வழிநடத்தவும், இரட்டை இலையை மீட்கவும் விரும்புகிறோம்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைக்க அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளதால், இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கான முட்டுக்கட்டை விலகியுள்ளதாக தெரிகிறது. இணைப்பு பேச்சுவார்த்தை குறித்து இரு தரப்பினரும் இன்று முடிவு எடுக்கக் கூடும் என தெரிகிறது.

இதனிடையே, வெற்றிவேல், சுப்பிரமணியன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்கள் நேற்று மாலை டிடிவி தினகரனை, அவரது பெசண்ட் நகர் வீட்டில் சந்தித்துப் பேசினர்.

அதன்பின் சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘அதிமுக எம்எல்ஏக்கள் 122 பேரும் டிடிவி தினகரன் பின்னால்தான் உள்ளனர். அவர்தான் கட்சியை வழிநடத்துகிறார். எனவே, அவர்தான் முடிவெடுக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம், நேற்று ஒன்று, இன்று ஒன்று என பேசுகிறார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றும் இல்லை. நாங்கள் அனைவரும் தினகரன் வழிகாட்டுதல்படி தான் நடப்போம்’’ என்றார்.

அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் பலர் சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைக்க முடிவு செய்துள்ள நிலையில், டிடிவி தினகரனுக்கு சில எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், அதிமுகவில் மேலும் பிளவு ஏற்பட்டு, தினகரன் அணி என்ற மூன்றாவது அணி உதயமாகியிருக்கிறது.

தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் அவசர கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. தினகரனின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பது இந்த அவசர கூட்டத்துக்குப் பின்னர் தெரிய வரும்.