ஓ.பி.எஸ்ஸா, சசிகலாவா – யார் முதல்வர்?: ஆளுநர் முடிவு இப்போதைக்கு இல்லை!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓ.பி.எஸ். அணி, ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா தலைமையில் வி.கே.எஸ் அணி என ஆளும் அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுண்டிருப்பதால், முதல்வர் பதவி யாருக்கு என்ற கேள்வியுடன். தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (வியாழன்) மதியம் மூன்று மணிக்கு சென்னை வந்தார். அவரை கிண்டி ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  மாலை ஐந்து மணிக்கு சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆளுநர் வித்யாசாகர் ராவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்.

ஓ.பி.எஸ் உடன் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன, மாநிலங்களவை எம்.பி. மைத்ரேயன், முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ்., “இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் நடக்கும் யுத்தம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மீண்டும் தர்மம் வெல்லும். ஜெயலலிதாவின் வாழ்த்துக்களுடன் செயல்படுகிறேம்” என்று கூறினார்.

அதன்பின் சசிகலா தனக்கு ஒதுக்கப்பட்ட நேரமான இரவு 7.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி, கே.ஏ.செங்கோட்டையன், பாண்டியராஜன், ஜெயகுமார் உள்ளிட்டோருடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசினார். அப்போது தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களின் பட்டியலை கொடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஓ.பி.எஸ்., சசிகலா ஆகிய இரு தரப்பினரும் அளித்துள்ள விவரங்களின் அடிப்படையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஓர் அறிக்கை தயாரித்த ஆளுநர், அந்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலிடம் வழங்கும் உரிய ஆலோசனையைப் பெற்று, அதன்பிறகே ஆளுநர் இறுதி முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. எனவே, யார் முதல்வர் என்பது பற்றிய ஆளுநர் முடிவு இப்போதைக்கு இல்லை என தெரிகிறது.

 

Read previous post:
0
சசிகலா ஆதரவு தடியர்கள் அராஜகம்: தற்காப்புக்கு துப்பாக்கி எடுத்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்! – வீடியோ

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி பதவியை ராஜினாமா செய்ய வைத்த சசிகலாவை கண்டித்து, அரியலூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அங்கு தடிகளுடன் வந்த

Close