எட்டுவழி சாலையை ஆதரிக்கும் ரஜினிக்கு கமல் அறிவுரை: “முதலில் மக்களை சந்தித்து கருத்து கேளுங்கள்!”

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை – சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தை ரஜினிகாந்த் ஆதரித்துள்ளார். அவர் முதலில் மக்களைச் சந்தித்து அவர்களது கருத்தைக் கேட்க வேண்டும். எட்டுவழிச் சாலை இல்லாததால் எங்கள் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் யாராவது சொன்னார்களா?

சேலம்-சென்னைக்கு இடையே இந்த ஒரு சாலைதான் உள்ளதா? வெவ்வேறு பாதைகள் இருக்கின்றன. அவற்றை இதைவிட குறைந்த செலவில் விரைந்து முடிக்க வழிகள் இருக்கின்றன. பல அரசியல் தலைவர்கள் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் கேட்காமல் இப்படிதான், இது தான் என்று மக்களை வற்புறுத்த முடியாது.

இவ்வாறு கமல் கூறினார்.