“வருமான வரித்துறை சோதனை கண் துடைப்பாக இருக்கலாம்”: கமல் சந்தேகம்!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஊழல்கள் அதிகமாக இருப்பதால் தான் நான் கட்சியைத் தொடங்கி உள்ளேன். இதுவரை தமிழகத்தில் நடந்த ரெய்டு மூலம் அகப்பட்ட பணமும், தங்க நகைகளும் என்ன ஆனது? அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதை பற்றி ஒரு பேச்சும் இல்லையே?

வருமான வரிச் சோதனை நமக்காக நடப்பதாக வைத்துக்கொண்டாலும் அதில் நடப்பது என்ன என்பதை நமக்குத் தெரிவிக்க வேண்டாமா? தெரிவிப்பது கடமையில்லையா? கிணற்றில் போட்ட கல்லாக எத்தனை நாட்கள் இருக்க முடியும்? வருமான வரித்துறை சோதனை கண் துடைப்பாக இருக்கலாம் என்று சந்தேகப்படும் அளவிற்கு வந்துவிட்டது. இதை நிவர்த்தி செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

மாநில அரசை அச்சுறுத்தவே வருமான வரிச் சோதனை என்ற கருத்தை முறியடிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இருந்தால் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு கமல் கூறினார்.