“அயனாவரம் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தவறு!” – கமல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அயனாவரத்தில் 12 வயது மாற்றுத் திறனாளியான சிறுமிக்கு நேர்ந்த துயரம், தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயலாக உள்ளது. சிறுமிகளின் பாதுகாப்பு நலனில் மெத்தனமாக இருந்து விட்டோமோ என்ற பதட்டம் ஏற்படுகிறது. ‘மகாநதி’ என்ற படத்தை எடுத்துவிட்டுக் கடமை முடிந்து விட்டதாகக் கூற முடியாது. இன்னும் யதார்த்த வாழ்க்கையில் அப்படி நடந்துவிடாமல் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

குடும்பத்தில் உள்ளவர்களும குடும்பத்திற்கு தெரிந்தவர்களும் இது போன்ற காரியங்களில் ஈடுப்பட்டுள்ளதாக நிரூபணமாகி உள்ளது. யாரோ கதவை உடைத்துக்கொண்டு வந்து கள்வன் செய்கிற வேலை இல்லை இது.

சிறுமி மீது நடந்த பாலியல் சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம். அதேநேரத்தில், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தவறு. இவர்களை அடித்துக் கொன்றுவிட்டால் அது இன்னொரு கொலையாக மாறிவிடும். நீதிமன்றங்களுக்கு வேலையில்லாமல் போய்விடும்.

ஆனால், இந்த விவகாரத்தில் நீதி விரைவாகச் செயல்பட வேண்டும். நின்று கொல்வதெல்லாம் நீதிக்கு ஆகாது. எல்லாரும் பாய்ந்து தோலை உரித்து உப்புக் கண்டம் போட வேண்டும் என்பது புராதன விஷயம். சட்டம் அதற்கான தண்டனைகளை வகுத்து வைத்து இருக்கிறது. இருப்பதில் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். இவர்களுக்கு மனிதாபிமானம் காட்ட வேண்டிய அவசியமில்லை. சட்டத்துக்குட்பட்டு கடுமையான தண்டனையை விரைவாக நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதும் சட்டத்தின் மீதும் நம்பிக்கை வரும்.

இவ்வாறு கமல் கூறினார்.