தமிழக சட்டப் பேரவையை முடக்கிவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டம்!

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்தால், சட்டப்பேரவையை முடக்கிவிட்டு, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர். முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதத்தில் கூறியுள்ளனர்.

இவர்கள் தவிர அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோரும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால் ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

அதிமுக அணிகளை இணைக்க பிரதமர் மோடிதான் தீவிர முயற்சிகள் மேற்கொண்டதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. அதை உறுதிப்படுத்துவதுபோல துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றுக் கொண்ட அடுத்த நிமிடமே ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் மோடி.

இந்நிலையில், தமிழக அரசியல் நிலவரங்களை பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், சட்டப்பேரவையை முடக்கி ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இணைப்புப் பாலமாக செயல்பட்ட முக்கியப் பிரமுகரிடம் மோடியும், அமித்ஷாவும் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Courtesy: Tamil.thehindu.com