“தமிழக மக்கள் ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்”: ரஜினி புதிர் பேச்சு!

“என்னுடைய ரசிகர்கள், தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். என்னவோ தெரியவில்லை, ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள். அது என்ன என்பதை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரஜினிகாந்த் பேசியதாவது:

ரசிகர்களை சந்தித்து 15 வருடங்களாகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு படம் வெற்றியடைந்தால் வெற்றிவிழா கொண்டாடுவார்கள். அங்கு சந்திப்போம். இப்போது 12 வருடங்களாக அந்த மாதிரியான விழாக்கள் நடக்கவில்லை. ‘எந்திரன்’ நல்ல வெற்றியடைந்தது. ஆனால் வெற்றி விழா சில காரணங்களால் அவர்கள் செய்யவில்லை. அதற்குப் பிறகு ‘கோச்சடையான்’, ‘குசேலன்’ படங்கள் எல்லாம் சரியாகப் போகவில்லை. ‘கபாலி’ நல்ல வெற்றி தான். சில காரணங்கள், சில நிகழ்வுகளால் விழாவாக கொண்டாட முடியவில்லை. அந்த நேரத்தில் விழா கொண்டாடினால் மட்டுமே சரியாக இருக்க முடியும். இப்போது தான் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

நான் முதலில் சந்திக்கலாம் என்று முடிவு செய்தபோது, ஏன் முடியவில்லை என்ற காரணத்தை சொல்லியிருந்தேன். 5 நாட்களில் மொத்தமாக சந்திக்கலாம் என்று முடிவு செய்து, 8 பேராக புகைப்படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தபோது சில பிரச்சினைகள் வந்ததால் ஒத்திவைத்தேன். அதனைத் தொடர்ந்து சரியாக திட்டமிட்டு, நாமெல்லாம் எப்படி, கட்டுப்பாட்டோடு ஒழுக்கமாக நடைபெற வேண்டும் என்று நினைத்தேன். இடையே ‘2.0’ டப்பிங் பணிகள் இருந்தது. மேலும், மே 28-ம் தேதி அடுத்த படத்தின் பணிகள் துவங்குகிறது. அதற்கான கதை விவாதப் பணிகள் எல்லாம் இருந்தது. அதனால் தான் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை. இப்போது நேரம் கிடைத்ததால் ஏற்பாடு செய்துள்ளோம்.

இலங்கை போவதாக இருந்தது. அதுவும் சில காரணத்தால் போக முடியாமல் ரத்து செய்யப்பட்டது. உடனே, ஊடக நண்பர்கள் ரஜினி எதிலுமே திடமாக நிற்க மாட்டார். அனைத்தையும் ரத்து செய்துக் கொண்டே இருப்பார். முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பார். தயங்குகிறார், பயப்படுகிறார் என்றெல்லாம் எழுதினார்கள். நான் ஒரு விஷயம் முடிவு எடுத்தால், ரொம்ப யோசிப்பேன். சில முடிவுகள் எடுத்தவுடன் தான் பிரச்சினைகள் இருக்கிறது என்பது தெரியும். நாம் கொஞ்சம் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். தண்ணீருக்குள் காலை வைக்கிறோம். காலை வைத்தவுடன் தான் தெரிகிறது உள்ளே நிறைய முதலைகள் எல்லாம் இருக்கிறது என்று. காலை பின்னால் எடுக்கவில்லை என்றால் பிரச்சினையாகி விடும். முரட்டு தைரியம் எல்லாம் இருக்கக் கூடாது. பேசுகிறவர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள்.

ரஜினி ஒரு படம் வெளியாகும் போது மட்டும், ஏதாவது ஸ்டண்ட் பண்ணுவார், ஏதாவது சொல்லுவார், படம் ஓடுவதற்கு ஏதாவது யுக்திகள் செய்வார் என்ற ஒரு பேச்சு இருக்கிறது. உங்களுடைய ஆசீர்வாதத்தாலும், அன்பாலும் அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் என்னுடைய ரசிகர்கள், தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். என்னவோ தெரியவில்லை ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள். அது என்ன என்பதை இப்போது நான் சொல்லவிரும்பவில்லை.

அரிசி வெந்தால் மட்டுமே சோறாகும். படம் நன்றாக இருந்தால் மட்டுமே வெற்றியடையும். முத்துராமன் சார் மற்றும் பெரிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகள் கொடுத்து, நல்ல திரைக்கதை அமைத்து, நல்ல பாடல்கள் கொடுத்து, நல்ல கருத்துகள் சொல்லி, நல்ல படங்கள் கொடுத்ததால் மட்டுமே நான் இங்கே நிற்கிறேன். என்னுடைய படங்கள் வரும் போதெல்லாம் ரஜினி ஏமாற்ற மாட்டார், நல்ல படம் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே படத்துக்கு வருவீர்கள். என்னால் முடிந்தவரைக்கும் அதை செய்து கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.