“அப்போது குடி என்ற கெட்ட பழக்கம் எனக்கு இருந்தது”: ரஜினி ஓப்பன் டாக்!

நடிகர் ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சென்னையில் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். மே 19ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ரசிகர்களுக்கு அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ‘க்யூஆர்’ கோடுடன் கூடிய விஷேச அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே ரஜினியோடு புகைப்படம் எடுக்க மண்டபத்தினுள் அனுமதிக்கப்பட்டார்கள்.

ரசிகர்களுடான சந்திப்பு நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனோடு ரஜினி கலந்து கொண்டார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசியதற்கு பின்பு ரஜினி பேசியதாவது:

“முதலில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனைப் பற்றிப் பேச விரும்புகிறேன். ஏற்கனவே சென்னையில் இருக்கும் எனக்கு இன்னொரு சகோதரர் அவர். அவர் என் மீது வைத்திருக்கும் அன்பு, எனக்குச் சொல்லிக் கொடுத்தப் பாடங்கள் நிறைய உள்ளது. அதிக ஒழுக்கத்தை நான் எஸ்.பி.முத்துராமன் அவர்களிடம் தான் கற்றுக் கொண்டேன். உண்மை, நேயம், சத்தியம் முதலியவற்றை எஸ்.பி.முத்துராமனிடம் பார்த்தது போல நான் வேறு யாரிடமும் பார்த்ததில்லை.

எப்போது நான் அவரை சந்தித்தாலும் 2 விஷயங்களைச் சொல்வார். “முதலில், ரஜினி எதையும் டென்சன் பண்ணிக் கொள்ளாதே. உடம்பைப் பார்த்துக் கொள். இரண்டாவது ரசிகர்களை மீட் பண்ணு. அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள். நான் எங்கே போனாலும் ரசிகர்கள் என்னிடம் சாரை மீட் பண்ணச் சொல்லுங்கள்” என்று சொல்கிறார்கள் என்பார்.

நான் எஸ்.பி.முத்துராமன் சாரோடு ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படம் தான் முதலில் பணிபுரிந்தேன். அந்த நாட்களைப் பற்றி பேசுவதற்கு வெட்கமாக உள்ளது. இருந்தாலும் சொல்லித் தான் ஆகவேண்டும். அப்போது குடி என்கிற கெட்டப் பழக்கம் என்னிடம் இருந்தது. இரவுப் பணிகள் முடித்துவிட்டு தூங்கிவிடுவேன். காலை படப்பிடிப்புக்குச் செல்ல தாமதமாகும். 3 நாட்கள் தாமதமாக சென்றவுடன், நான்காவது நாள் மேக்கப் மேன் முத்தப்பா என்னிடம் “இயக்குநர் உங்களை தனியாக சந்திக்க வேண்டும் என்கிறார்” என்றார். அப்போது அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு முத்துராமன் சார் வந்தார். “ரஜினி.. நீ இப்போது படத்தில ஹீரோ. ஹீரோ சரியான நேரத்துக்கு வந்தால் மட்டுமே அனைவரும் சரியாக வருவார்கள். ஹீரோவே லேட்டாக வந்தால், அனைவருமே லேட்டாகத்தான் வருவார்கள். அதனால் நீ முதலில் செட்டுக்கு (படப்பிடிப்பு தளத்துக்கு) வந்துடு” என்று சொன்னார். அன்றிலிருந்து நான் தான் படப்பிடிப்புக்கு முதலில் செல்வேன்.

ஒரு சில நாட்கள் தூங்கிவிடுவேன். அப்போது “ஏன் என்னை எழுப்பவில்லை” என்று கேட்டால் “வேறு வேலை இருக்கிறது. ரெஸ்ட் எடுக்கட்டும். எழுப்பாதீர்கள்” என்று எனது உதவியாளர்களிடம் முதலிலேயே சொல்லி வைத்துவிடுவார் எஸ்.பி.முத்துராமன் சார். எனக்கு வழிக்காட்டியாக இருந்தவர் அவர்.

தயவு செய்து குடும்பம், குழந்தைகள் ஆகியவற்றை பார்த்துக் கொள்ளுங்கள். குடி, சிகரெட் பிடிப்பது போன்ற கெட்ட பழக்கங்களை விட்டுவிடுங்கள். கோடி கோடியாக பணமிருந்தது அனைத்தையும் குடித்தே நாசமாக்கிவிட்டான் என்று சொல்லுவார்கள். குடி பழக்கத்தால் மூளையும் கெட்டுப் போய்விடும். குடித்தால் நமது சிந்தனை சக்தியும் வேறு மாதிரி மாறிவிடும். அப்படி மாறும்போது நாம் எடுக்கும் முடிவு எல்லாம் தப்பாக போய்விடும். அதனால் நம் வாழ்க்கையே கெட்டுவிடும். ஆகையால் குடிப்பழக்கம் இல்லாதவர்கள், தயவு செய்து தொட வேண்டாம். குடிப்பழக்கம் இருப்பவர்கள் முழுமையாக விடுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்

Read previous post:
r1
ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தில் ரஜினிகாந்த் – படங்கள்

ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தில் ரஜினிகாந்த்!

Close