சிவகார்த்திகேயனை அடுத்து மேடையில் அழுதார் நடிகை பூர்ணா!

‘ரெமோ’ படத்தின் நன்றி விழா மேடையில் நடிகர் சிவகார்த்திகேயன் அழுததை அடுத்து, ‘சவரக்கத்தி’ படத்தின் டீஸர் வெளியீட்டு விழா மேடையில் அப்படத்தின் நாயகி நடிகை பூர்ணா அழுதார்.

இயக்குனர் மிஷ்கின் எழுதி, தயாரித்துள்ள படம் ‘சவரக்கத்தி’. ஆதித்யா இயக்கியுள்ள இந்த காமெடி படத்தில் இயக்குனர் ராம் கதாநாயகனாகவும், இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்க இயலாமல் போராடிக்கொண்டிருக்கும் அழகான, திறமையான நடிகை பூர்ணா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகியாக இப்படத்தில் நடித்துள்ளார்.

‘சவரக்கத்தி’ படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. நாயகி பூர்ணா இவ்விழாவில் கலந்துகொண்டு பேசியதாவது:

டான்ஸராக இருந்த நான் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தேன். அந்த படத்தைப் பார்த்தவர்கள் என் நடிப்பை பாராட்டினார்கள்.

அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்தேன். ஆனால் அண்மை காலமாக எனக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பட வாய்ப்புகள் இல்லாமல் சும்மா இருந்து என்ன செய்வது என தோன்றியது.

மீண்டும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் சும்மா இருப்பதற்கு பதிலாக மீண்டும் டான்ஸராகிவிட்டால் என்ன என்று நினைத்தேன். அந்தநேரத்தில் தான் மிஷ்கின் என்னை நம்பி இந்த படத்தில் நடிக்க வாய்ப்பும், நல்ல கதாபாத்திரமும் கொடுத்துள்ளார்.

ரொம்ப நாள் கழித்து என்னை பெரிய திரையில் பார்த்த என் அம்மாவுக்கு அழுகை வந்துவிட்டது.

இவ்வாறு பேசிய பூர்ணா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.