அரசியலுக்கு வந்தால் நியாயமாக, உண்மையாக இருப்பேன்: ரஜினி சூசக அறிவிப்பு!

“இப்போது நடிகனாக எனது கடமையை செய்து கொண்டிருக்கிறேன். மக்களை மகிழ்விக்கிறேன். அதே மாதிரி என்ன பொறுப்புக் கொடுத்தாலும் அதை நியாயமாக, உண்மையாக, சத்தியமாகச் செய்வேன். அது என்ன என்பது எனக்கு தெரியாது. கடவுளுக்குத் தான் தெரியும்” என்று ரஜினிகாந்த் பேசினார்.

ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரஜினிகாந்த் பேசியதாவது:

என்னைப் பற்றி ஒரு விஷயம் முக்கியமாக பேசுகிறார்கள். அரசியல் சம்பந்தமாக ரஜினி எதையும் சொல்ல மாட்டார். கருத்து சொல்ல மாட்டார். ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு காரணமே அரசியல் மாயை காட்டத் தான் என்கிறார்கள்.

20 வருடங்களுக்கு முன்பு நடந்தது ஓர் அரசியல் விபத்து என்று சொல்லலாம். அந்த சமயத்தில் சில சூழ்நிலைகள் காரணமாக நான் ஒரு அரசியல் கூட்டணிக்கு என்னுடைய ஆதரவை தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கு என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்கள், நான் ஆதரித்த கூட்டணிக்கு வாக்குகள் அளித்து ஜெயிக்க வைத்தார்கள். அப்போதிலிருந்து எனது பெயர் அரசியலில் அடிபட ஆரம்பித்தது. அப்போது என்னுடைய ரசிகர்களில் சில பேர் அரசியலில் மிகவும் ஆர்வமாக ஈடுபட்டு விட்டார்கள்.

சில அரசியல்வாதிகள் அவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். ரசிகர்களும் அவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். அதில் சிலர் பணமெல்லாம் பார்த்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல் வரும்போது ரசிகர்கள், அரசியல்வாதிகளை நாடுவது, அவர்கள் இவர்களை நாடுவது என தொடங்கிவிட்டது. அதனாலே நான் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், என்னுடைய ஆதரவு யாருக்குமில்லை என்ற சூழலுக்கு தள்ளப்படுகிறேன். அனைவருமே என்னுடைய ஆதரவுக்காக காத்திருப்பதில்லை. என்னுடைய பெயரை வைத்து யாரும் ஆதாயம் தேடிவிடக் கூடாது என்பதற்காகத் தான் சொல்கிறேன்.

பல ரசிகர்கள் எனக்கு நிறைய கடிதங்கள் எல்லாம் எழுதியுள்ளார்கள். நாமும் படம் பார்த்துக்கொண்டு இப்படியே இருந்தால் எப்படி?, நாம் எப்போது முன்னேறுவது, நமக்கு முன்னால் வந்தவர்கள் எல்லாம் இன்னோவா வண்டியில் போகிறார்கள், கவுன்சிலர் ஆகிறார்கள், எம்.எல்.ஏ ஆகிறார்கள், மந்திரி ஆகிறார்கள். நாம் எப்போது அப்படி ஆவது, பணம் சம்பாதிப்பது என்று சில ரசிகர்கள் கேட்கிறார்கள், பத்திரிகைகளுக்கு பேட்டியும் கொடுக்கிறார்கள். அது தப்பில்லை. கவுன்சிலர் ஆகலாம், மந்திரி ஆகலாம் என்ற ஆசையிருப்பதில் தவறில்லை. ஆனால், அதை வைத்து பணம் சம்பாதிப்பது என்று நினைப்பது தவறு. அவர்கள் சொல்வதைக் காணும்போது வருத்தப்படுவதா, கோபப்படுவதா, சிரிப்பதா என தெரியவில்லை.

நான் அப்போதும் சொல்கிறேன், இப்போதும் சொல்கிறேன். ஆண்டவன் கையில் தான் என் வாழ்க்கையுள்ளது. இந்த உடம்பை நான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், இதயத்தை தூயமையாக வைத்திருக்க வேண்டும். அந்த ஆண்டவனிடம் நான் ஒரு கருவி. அவர் என்னை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது நடிகனாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். நடிகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நாளைக்கு என்னவாக பயன்படுத்திகிறனோ அப்படி இருப்பேன். அவன் என்னவாக பயன்படுத்தினாலும் அதில் நியாயமா, உண்மையா, தர்மமா, மனசாட்சியோடு பணிபுரிவேன். இப்போது நடிகனாக எனது கடமையை செய்து கொண்டிருக்கிறேன். மக்களை மகிழ்விக்கிறேன். அதே மாதிரி என்ன பொறுப்புக் கொடுத்தாலும் அதை நியாயமாக, உண்மையாக, சத்தியமாகச் செய்வேன். அது என்ன என்பது எனக்கு தெரியாது. கடவுளுக்குத் தான் தெரியும்.

நீங்கள் ஒரு கெட்ட காரியம் செய்யும் போது, மனசாட்சி செய்ய வேண்டாம் என்று சொல்லும். அதை மீறி தான் நாம் செய்கிறோம். ஒரு வேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கும் ஆட்களை எல்லாம் கிட்டக்கூட சேர்க்க மாட்டேன். இப்போதே சொல்லிவிடுகிறேன். இன்னும் நிறைய பேச வேண்டும் என்ற ஆசையிருந்தால் கூட நேரமின்மை காரணமாக முடித்துக் கொள்கிறேன்.

தனித்தனியாக புகைப்படம் எடுத்தால் நேரமாகும் என்ற காரணத்தால் நான் உட்காருகிறேன். அனைவருமே என் பின்னால் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொடுங்கள். என்ன செய்தாலும் ஏதாவது ஒரு தவறு நிகழும். அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் தயவு செய்து மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். இங்கு வர முடியாத ரசிகர்களுடனும் விரைவில் புகைப்படம் எடுக்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.