“ஒரு கையில் பேனாவுடனும், மறு கையில் அரிவாளுடனும் சினிமாவுக்கு வந்த” வினு சக்கரவர்த்தி மரணம்

பிரபல குணச்சித்திர நடிகரும், திரை எழுத்தாளருமான வினு சக்கரவர்த்தி, உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இயற்கை எய்தினார். அவருக்கு வயது 72.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1002 படங்களில் நடித்தவர் வினு சக்கரவர்த்தி. இவர் நடிப்பில் வெளியான ‘குரு சிஷ்யன்’, ‘அண்ணாமலை’, ‘அருணாசலம்’, ‘நாட்டாமை’, ‘மாப்பிளை கவுண்டர்’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘ஜெமினி’, ‘முனி’, ‘தேசிங்கு ராஜா’, ‘வாயை மூடி பேசவும்’ போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1945ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி பிறந்தவர் வினு சக்கரவர்த்தி. “ஒரு கையில் பேனாவுடனும், மறு கையில் அரிவாளுடனும் புறப்பட்டு சினிமாவுக்கு வந்தவன் நான்” என்று தன்னைப் பற்றி கூறிக்கொண்ட அவர், 1970களில் கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் கதாசிரியாராக பணிபுரிந்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய ‘பரசக்கே கண்ட தின்மா’ என்ற படம் வெற்றி பெற்றது. அதுதான் பின்பு ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ என்ற தலைப்பில் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி, அதில் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார்.

கடந்த 3 ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்துவந்த வினு சக்கரவர்த்தி, நேற்று (புதன்கிழமை) சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (வியாழக்கிழமை) மாலை 7 மணியளவில் இயற்கை எய்தினார்.

திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற வேட்கையுடன் திரையுலகுக்குள் அடியெடுத்து வைத்த அவர், சிறந்த குணச்சித்திர நடிகராகவும், சிறந்த திரை எழுத்தாளராகவும் பெயர் பெற்றாரே தவிர, எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் இறுதி வரை அவரது இயக்குனர் கனவு நிறைவேறவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

வினு சக்கரவர்த்திக்கு கர்ணப்பூ என்ற மனைவியும், சரவணன் என்ற மகனும், சண்முகப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.

வினு சக்கரவர்த்தியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

#