“எவன் நெனைச்சாலும் என்னை புடிக்க முடியாது!” – விஷால்

ஒரு நடிகர் நட்சத்திர அந்தஸ்து பெற்றுவிட்டால், அவர் நடிக்கும் படத்தில் அவரை “வீரன்”, “சூரன்” என்று மற்றவர்கள் புகழ்ந்து பாடுகிற மாதிரி, அல்லது தன்னைத் தானே பெருமையடித்துக் கொள்கிற மாதிரி ஒரு பாடல் காட்சி நிச்சயம் இடம் பெறும். இது தமிழ் திரையுலகில் காலங்காலமாக இருந்துவரும் வழக்கம். இந்த வழக்கத்துக்கு நடிகர் விஷாலும் விதிவிலக்கு அல்ல.

நடிகர் சங்கத்திலும், நிஜகாதல் வாழ்க்கையிலும் விஷாலுக்கு எதிரிகள் இருக்கிறார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். இந்நிலையில், “எவன் நெனைச்சாலும் என்னை பிடிக்க முடியாது…” என தொடங்கும் பாடலை விஷால் தற்பெருமையுடன் பாடி ஆடுகிற மாதிரியான ஒரு பாடல் காட்சி, அவர் கதாநாயகனாக நடிக்கும் ‘கத்தி சண்டை’ படத்துக்காக படமாக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படத்தில் விஷாலும், அவருக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னாவும் சேர்ந்து, “குட்டி குட்டி நெஞ்சிலே காதல் வந்ததும், நெஞ்சில் லட்சம் பூக்கள் பூக்குதே…” என தொடங்கும் காதல் பாடலை பாடி ஆடும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் காட்சி நடன இயக்குனர் ராதிகாவின் நடன அமைப்பில் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டது.

0a1f

இப்படத்தில் காமெடி கதாபாத்திரங்களாக வடிவேலு, சூரி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் ஜெகபதி பாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் இப்படத்தை தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சுராஜ். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

காமெடியும், அதிரடி ஆக்ஷனும் கலந்து உருவாக்கப்பட்டுவரும் ‘கத்தி சண்டை’, வருகிற தீபாவளியன்று திரைக்கு வருகிறது.