சர்ச்சை: ‘முத்துராமலிங்கம்’ படத்துக்காக கமல்ஹாசன் பாடிய “தேவர் புகழ்” பாடல் – வீடியோ

குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரித்திருக்கும் புதிய படம் ‘முத்துராமலிங்கம்’. ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் நெப்போலியன், விவேக் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

 இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை புகழ்ந்து பாடும் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. அமரர் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ள இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

“தெக்கத்தி சிங்கமடா

முத்துராமலிங்கமடா!

சுத்த பசும்பொன்னு தங்கமடா

எக்குலத்தோருக்கும் சொந்தமடா…

மத்ததெல்லாம் தள்ளு

அந்த பேரை மட்டும் சொல்லு

வீரத்தோட நில்லு

இங்க எதிர்ப்பது யார் சொல்லு…”

– என தொடங்கும் அப்பாடல் வெறியேற்றும் துள்ளல் இசையில் உச்சஸ்தாயியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை என்பதால், அதற்கு முதல் நாளான 29ஆம் தேதி இப்பாடலின் டீஸர் மற்றும் பல்லவி வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகர் விவேக் வெளியிட்டுள்ளார்.

இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’ படத்தில் இடம் பெற்ற “போற்றிப் பாடடி பொண்ணே… தேவர் காலடி மண்ணே..” என்ற பாடல் தென்தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் பதட்டத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதே போன்ற பதட்டத்தையும், சாதி மோதலையும் ‘முத்துராமலிங்கம்’ படத்துக்காக இளையராஜா இசையமைப்பில் கமல்ஹாசன் பாடியுள்ள இந்த பாடலும் ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

https://youtu.be/CBd_Wx4CfdI