‘த ரெவனன்ட்’ போன்ற படங்களை தமிழில் எடுக்க பாலாவால் முடியும்!

சில திரைப்படங்களை பார்த்து முடித்தவுடன் அவை தரும் பிரமிப்பில் மனம் தன்னிச்சையாக சில வார்த்தைகளை உருவாக்கும். அந்த அனுபவத்தை சொல்லில் மொழிபெயர்க்க முயலும்.

அவ்வாறாக The Revenant திரைப்படத்தை பார்த்து முடித்தவுடன் என்னுள் தோன்றிய வார்த்தை ‘இதுவொரு அனுபவம்; மகத்தான அனுபவம். அதிலும் பெரிய திரையில் பார்ப்பது இன்னமும் மகத்தான பேரனுபவம்’.

இந்த உணர்வு தொடர்பான சொற்களையே சில அச்சு ஊடக விமர்சனங்களிலும் பார்க்க முடிந்தது. இப்போது இந்த வார்த்தையையே நானும் பயன்படுத்தினால் நக்கலாகி விடுகிற சங்கடமும் உண்டு. இத்திரைப்படத்தைப் பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்.

இது போல் ஒரு திரைப்படம் அல்லது இதற்கு ஏறத்தாழ நெருங்கி வருகிற ஒரு முயற்சியை தமிழில் எந்த இயக்குநரால் உருவாக்க முடியும் அல்லது உருவாக்கிவிட முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். விபரீதம்தான். விபரீதமான கற்பனை என்று ஒன்றிருக்க முடியாதா என்ன?

“சார்.. நம்ம ஹீரோ கரடியோடு கட்டிப்புரண்டு ஆக்ரோஷமா சண்டை போட்டு அதை சாவடிக்கிறான். டூப் போட்டுடலாம்.. நம்ம டைகர் பாய் கரடி மாதிரியே நல்லா பண்ணுவான். மேக்கப்கூட தேவையில்ல. டல் லைட்ல எடுத்தா கரடி மாதிரியே இருப்பான். CG ல மேட்ச் பண்ணிக்கலாம். அதை தூரத்துல இருந்து பயந்து போயி ஒரு பொண்ணு பார்க்குறா.. அவ வந்து காட்டுவாசி தலைவனோட பொண்ணு. அவளுக்கு இவன் மேல லவ் வந்துடுது… அவ பாயிண்ட் ஆஃப் வியூல ஒரு லவ் ஸாங் வெக்கறோம் சார்..

எதிரியாளுங்க ஹீரோவை துரத்திட்டு வர்றாங்க.. நீர்வீழ்ச்சில இருந்து குதிக்கறான். அதை ஒரு இருபது ஆங்கிள்ல ஷூட் பண்றோம்.. தப்பிச்சு போய் ஒளிஞ்சுக்கறான்.. அங்க சில ஆளுங்க.. ஒரு பொண்ணை கடத்தி வெச்சிருக்காங்க.. அவளை டான்ஸ் ஆட சொல்லி கட்டாயப்படுத்தறாங்க.. அங்க ஒரு செக்சியா ஐட்டம் சாங்… சார்… அவ ஒளிஞ்சிருக்க ஹீரோவைப் பார்த்துடுறா.. இவனும் அவளுக்கு சைகை செஞ்சு அவளை தப்பிக்க வெச்சு கூட்டிட்டுப் போயிடறான். பின்னாடியே திபு திபுன்னு ஆளுங்க.. செம பைட் சார்.. எப்படியோ தப்பிச்சிடறான்.. இவளுக்கும் ஹீரோ மேல லவ் வருது சார்.. இந்த இடத்துல ஒரு சாங்..”

***

ஓகே.. விளையாட்டை விட்டுவிட்டு சற்று தீவிரமாக யோசித்தால்…

தமிழில் இது போன்ற அல்லது ஏறத்தாழ ஒரு அனுபவத்தை எந்த இயக்குநரால் தர இயலும் என்று தீவிரமாக யோசித்தால் பாலா மட்டுமே என் கண் முன்னே நிற்கிறார்.

சிரித்து முடித்து விட்டீர்களா?

தொடர்வோம். மதியத்திற்கு தயிர்சாதம் கட்டிக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்புகிற உங்களின் சராசரியான நடுத்தர வர்க்க வாழ்வியல் அனுபவத்திலிருந்து உங்களை முற்றிலுமாக துண்டித்து நீங்கள் கற்பனையிலும்கூட அறிந்திராத மனிதர்களின், காலத்தின், பிரதேசத்தின் நிகழ்வுகளை உங்களுக்கு ஒரு கதைப் பின்னணியில் கோர்வையாக அறிமுகப்படுத்துவர்தான் ஒரு படைப்பாளி.

உங்களுக்கு நன்கு அறிமுகமாகியிருக்கிற உங்கள் சமூகத்தின் அன்றாட பிரச்சினைகளையே அலசும் இயக்குநர்களும் இருக்கிறார்கள்.

படைப்பாளிகள் அதிலிருந்து மாறுபட்டவர்கள். தங்களுக்கான உலகை, அதன் பாத்திரங்களை சிருஷ்டிப்பவர்கள்.

பாலா இதுவரை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் களங்களை சற்று பார்ப்போமா?

மனநிலை பிறழ்ந்தவர்களின் உலகம், அதன் மரபு சார்ந்த சிகிச்சை முறைகள், அவர்களின் குடும்பத்தினர் படுகிற துயரங்கள் போன்றவற்றை விவரித்த களம் – சேது.

நல்ல நோக்குடன் வன்முறையை கையாளும் ஒரு பெரியவர். ஏறத்தாழ அதே மூர்க்கத்துடன் அவருடன் இணையும் ஒரு இளைஞன். அவனுடைய இளம் வயது காயங்கள். அதனால் தாயுடன் ஏற்படும் பிரிவு. ஈழத் தமிழரின் துயரம், அவனுடைய வன்முறையை மட்டுப்படுத்த தெரியாமல் அவனுடைய தாய் எடுக்கும் முடிவு – நந்தா.

ரகசியமாக கஞ்சா தோட்டம் வைத்திருக்கும் வியாபாரி. அவனிடம் வந்து சேரும் ஒரு மூர்க்கன். அந்த நிலவெளிக் காட்சிகள்.. அவனுடைய நண்பன்.. கஞ்சா வியாபாரியின் துரோகம்.. மூர்க்கனின் பழிவாங்கல்.. – பிதாமகன்

காசி – அகோரியின் வாழ்வியல் அனுபவம் – இன்னொரு புறம் ஊனமுற்றவர்களை வைத்து பிச்சையெடுக்கும் வியாபாரம் செய்யும் தீயவன் – அவனிடம் அவதிப்படும் ஒரு குருட்டுப் பெண் – அவளுடைய மாறாத துயருக்கு விடுதலை தரும் அகோரி. – நான் கடவுள்

காலனியாதிக்கத்தால் தன்னுடைய அந்தஸ்தையும் ஆடம்பரத்தையும் இழந்த ஜமீன்தார்களின் ஒரு எச்சம். அவர் மீது பிரியமாயும் விசுவாசமாயும் இருக்கிற ஊர் மக்கள். இரு முரட்டுத்தனமான இளைஞர்கள் .. இது சார்ந்த நிலவெளிக் காட்சிகள்… அவன் இவன்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் ஒரு தமிழக கிராமம். வறுமை. பிழைப்பு தேடி ஆசை வார்த்தை காட்டும் ஒரு நயவஞ்சகனை நம்பி மலைப் பிரதேசங்களில் பணிபுரிய கிளம்பும் அப்பாவி மக்கள். அவை சார்ந்த நிலவெளிக்காட்சிகள்.. – பரதேசி

சமீபத்திய படத்தை சாய்ஸில் விடுவோம்

***

இத்திரைப்படங்களின் குறைகள், அது பேசும் அரசியல் ஆகியவற்றை சற்று ஒத்தி வைப்போம்.

ஆக பாலா கையாளும் பிரதேசங்கள், காலக்கட்டங்கள், மனிதர்கள், நிகழ்வுகள், நிலவெளிக் காட்சிகள் அனைத்துமே அதுவரை தமிழ் சினிமா கண்டிராத புதிய அனுபவங்கள்..

ஒரு கதாபாத்திரத்தை, ஒரு காட்சிக் கோர்வையின் உணர்வுகளை மிக அழுத்தமாக பாலாவால் உருவாக்க முடிகிறது. அதனால்தான் தமிழ்திரையில் அவர் தனித்துவமான இயக்குநராக கருதப்படுகிறார். அவருடைய உருவாக்கத்தில் சில தேய்வழக்குகள் இருந்தாலும்கூட அவருடைய இந்த பிரத்யேகமான தகுதியை எவரும் மறுக்க முடியாது.

பாலாவின் திரைப்படங்களுள் உள்ள பிரதானமான வீழ்ச்சி என்று அதன் திரைக்கதையை சொல்லலாம். பிதாமகனில் வரும் தொடர்பேயில்லாத சிம்ரன் நடனம் ஓர் உதாரணம். படப்பிடிப்புத் தளங்களில் எடுக்கப்படும் அப்போதைய முடிவுகளுக்கேற்ப படத்தின் திரைக்கதை அல்லாடுகிறதோ எனத் தோன்றுகிறது.

பாலாவிடம் ஒரு காட்சிக்கோர்வையை வலிமையுடன் செயலாக்குவதற்கான (Execution) திறமை இருக்கிறது. இத்திறமை அவருடைய படங்களில் துண்டு துண்டாக வெளிப்படுகிறது.. ஆனால் ஒட்டுமொத்த அனுபவத்தில் எதையோ இழக்கிறோம்.

எனவே பாலாவிற்கு தேவை, நன்றாக விவாதித்து உருவாக்கப்பட்ட ஒரு கறாரான திரைக்கதை. bounded script. படப்பிடிப்பிற்கு போன பின்னால் மிக மிக அவசியம் என்றால் தவிர அதிலிருந்து ஒரு துளியையும்கூட அவர் மாற்றக்கூடாது. அவ்வாறெனில் பாலாவால் அவருடைய திறமை இன்னமும் அழுத்தமாக வெளிப்படும்படியான திரைப்படங்களை உருவாக்க முடியும் என்று தோன்றுகிறது.

***

இந்தியாவின் பாரம்பரியத்தோடும் காலக்கட்டத்தோடும் ஒப்பிடும்போது அமெரிக்கா என்பது சமீபத்தில் உருவான பிரதேசம். அவர்களாலேயே தங்களின் கடந்த கால பின்னணியோடு சிறந்த திரைப்படங்களை உருவாக்க முடியும்போது நம்முடைட மரபு சார்ந்து இதுவரை எத்தனை உருவாகியிருக்க வேண்டும்?

சோழர்காலப் பின்னணியையும் சமகாலத்தையும் இணைத்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று செல்வராகவனால் கூட ஒரு திரைப்படம் தர முடிந்ததுதான். ஆனால் கார்த்தி-ரீமா-ஆண்ட்ரியா தொடர்பான தேவையற்ற காட்சிகள் நிறைய இருந்தன. எனவே அதை ஒரு முதிராத முயற்சி என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

இந்த சூழலில் The Revenant மாதிரி தமிழ் பழங்குடி இனங்களைப் பற்றிய படைப்புகளை உருவாக்குவதற்கான துணிச்சலும் தனித்துவமும் கொண்ட இயக்குநராக பாலாவைத் தவிர வேறு எவரும் இருப்பதாக தெரியவில்லை.

– சுரேஷ் கண்ணன்