விக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் திங்கட்கிழமை (21-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (சனிக்கிழமை) மாலையுடன் ஓய்ந்த்து.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன், பனங்காட்டு படை கட்சி வேட்பாளர் ஹரி நாடார் உள்ளிட்ட 23 பேர் போட்டியிடுகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வன், தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சி சார்பில் இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும் அவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர். அவர்கள் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.

தலைவர்களின் அடுத்தடுத்த வருகையால் கடந்த 15 நாட்களாக நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் பிரசாரம் அனல் பறந்தது.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க.- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க.-திமு.க. இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. வாக்கு எண்ணிக்கை வரும் 24ஆம் தேதி நடைபெறும்.