“என் தந்தை இல்லாமல் நான் இல்லை”: துருவ் விக்ரம் உருக்கம்!

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ‘ஆதித்ய வர்மா’. பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இப்படத்தின் மூலம் நாயகனாக கால் பதிக்கிறார். கிரிசாயா இயக்கியுள்ள இந்த படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படக்குழுவினரும் சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது அவர்கள் பேசிய பேச்சு விவரம்:-

a9

தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா:

‘ஆதித்ய வர்மா’ படப்பிடிப்பு தளத்தில், நடிகர் விக்ரம் ஒருபோதும் உச்ச நட்சத்திரம் போல நடந்து கொள்ளவில்லை. பாசமிகு தந்தையாகவே திகழ்ந்தார். 2021-ம் ஆண்டில், விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து நடித்து நம்மை மகிழ்விப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன்:

என் மகன் ஹிந்தி வெர்ஷனில் பணியாற்றினார், நான் தமிழில் பணியாற்றினேன். இது எங்கள் குடும்பத்திற்குள் இன்பம் நிறைந்த சவாலாக இருந்தது. சவாலான பாத்திரத்தில் துருவ் நடித்த விதம் பிரமாதம்.

இயக்குனர் கிரிசாயா:

நான் பல இயக்குனர்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன், ஆனால் எனக்கு முதல் அங்கீகாரம் தமிழ் திரை துறையில் தான் கிடைத்துள்ளது. தமிழ் மொழிக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொன்னான வாய்ப்பளித்த நடிகர் விக்ரம் மற்றும் தயாரிப்பாளர் மேத்தாவுக்கு நன்றி.
சில காட்சிகளைப் படமாக்கும்போது இரண்டு அல்லது மூன்று டேக்குகளுக்கு சென்றதற்காக துருவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். துருவின் முதல் டேக் எப்போதுமே சிறப்பாக இருந்தது. ஐ லவ் யூ துருவ்.

இசையமைப்பாளர் ரதன்:

என் பெயர் வித்தியாசமாக இருந்ததை வைத்து, என் தாய் மொழி தெலுங்கு என்று பலர் நினைத்தனர், ஆனால் நான் பச்சை தமிழன். இந்த மேடையில் நான் இருப்பதற்கு காரணம் நடிகர் விக்ரம் தான். தொழில்நுட்ப கலைஞர்களை ஊக்குவிப்பதிலும், மரியாதை தருவதிலும் விக்ரமிற்கு நிகர் அவர் மட்டுமே. ஒரு இரவு, நானும் எனது ஒலிப்பதிவாளரும் தாமதமாக வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென்று, பின்னால் இருந்து ஒரு மென்மையான குரல், ‘ஒரு கப் காபி வேண்டுமா?’ என்று அவரே கேட்டது மகிழ்ச்சியாக உள்ளது.

a4

நடிகை பிரியா ஆனந்த்:

 எஸ்ரா மூலம் மலையாளத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவிற்கு நன்றி. நான் ’இங்கிலிஷ் விங்லிஷ்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி உடன் பணிபுரிந்தபோது, அவர் ஒரு அம்மாவாக இருப்பதைக் கண்டேன். அதேபோல், ’ஆதித்ய வர்மா’வில் பணிபுரிந்தபோது, விக்ரம் அக்கறையுள்ள அப்பாவாக இருப்பதை உணர்ந்தேன். துருவ் உடன் பணிபுரிவது சிறப்பாக இருந்தது. ‘ஆதித்ய வர்மா’ மிகவும்  புதியாக இருக்கும் .

நாயகி பனிதா:

உதவி இயக்குநர்கள் குழுவுக்கு நன்றி. இது போன்ற அற்புதமான வேலையைச் செய்ததற்காக எனது இயக்குனர் கிரீசாயாவுக்கு நன்றி. படத்தை தயாரிக்கும்போது நடிகர் விக்ரம் அளித்த மகத்தான ஆதரவுக்கு நன்றி. விக்ரமுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். நானும் துருவும் திரையில் அழகாக இருக்க தினமும் அயராது உழைத்ததற்கு நன்றி. சக நடிகரான துருவின் திரைப்பயணத்தின் துவக்கத்தில் நான் இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்.

அறிமுக நாயகன் துருவ் விக்ரம்:

நான் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உரைகளை வழங்கினேன், ஆனால் இந்த விழா சற்று கூடுதல் சிறப்பு, காரணம் என் குடும்பம் இங்குள்ளது. எனது குடும்பத்தினால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன். இந்த படத்தில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த குழுவிற்கு நன்றி. எனக்கு ஆதரவளித்த தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவுக்கும், இசையமைப்பாளர் ரதனுக்கும் ஒரு பாடல் பாடியதற்காக நன்றி. ஆரம்பத்திலிருந்தே இப்படம் இயக்குனர் கிரீசாயா மற்றும் இணை இயக்குனர் உள்ளிட்ட திறன் வாய்ந்தோர் உள்ளங்கைகளில் இருப்பதை நினைத்து பெருமிதம் கொண்டேன். .அப்பாவுக்கு (விக்ரமுக்கு) நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர் இல்லாமல் நான் இல்லை. இந்த படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு 100 சதவீதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும்.

நடிகர் விக்ரம்:

துருவைப் போல பேச எனக்குத் தெரியாது. எனது 12-ம் வகுப்பு முடிவுகளுக்காக காத்திருக்கும்போதோ அல்லது ’சேது’ திரைப்பட வெளியீட்டிற்காக காத்திருக்கும்போதோ நான் ஒருபோதும் இந்த அளவு பதற்றத்தை உணரவில்லை. இன்று மட்டுமல்ல. இப்போது சில காலமாக நான் பதற்றமாக இருக்கிறேன். தயாரிப்பாளரான முகேஷ் மேத்தாவுக்கு துருவைத் தேர்ந்தெடுத்ததற்கும் அவர் மீது நம்பிக்கை வைத்ததற்கும் நன்றி. துருவின் டப்ஸ்மாஷைக் கண்டார், இந்த பாத்திரத்தில் நடிக்க துருவைப் பெற என்னை அணுகினார். இயக்குனர் கிரீசாயா மற்றும் இணை இயக்குனர் ஷரியா இல்லாமல், இந்த படம் சாத்தியமில்லை. ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனுக்கும் நன்றி. இன்று அவர் இந்தியாவின் சிறந்த டி.ஓ.பிகளில் ஒருவர். எங்கள் கனவின் காரணமாக நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதைத்தான் நான் துருவிடம் சொன்னேன். உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள். நான் என் மகனுக்கு கொடுக்கும் ஒரே மரபு என் ரசிகர்கள் தான். அந்த காதல் தானாகவே வருகிறது.